பீகாரில் ஊடுருவல்காரர்களை ஒழிப்போம் என்கிறார் அமித்ஷா; உண்மையான ஊடுருவல்காரர்கள் டெல்லியில்தான் உள்ளனர்: ஓவைசி கடும் தாக்கு
பாட்னா: பீகாரில் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு ஆளும் என்டிஏ கூட்டணி மற்றும் மகாபந்தன் (இந்தியா) கூட்டணிக்கு இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்தியா கூட்டணியில் இடம்பெற்ற அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி தனித்து 32 இடங்களில் மட்டும் போட்டியிடுகிறது. இந்நிலையில் பீகாரின் கோபால்கஞ்ச் பகுதியில் நேற்று ஓவைசி தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது, ‘பீகாரில் இருந்து ஊடுருவல்காரர்களை ஒழிப்போம்’ என்று அமித் ஷா பலமுறை கூறி வருகிறார்.
இருப்பினும், மோடிக்கும் ஷாவுக்கும் மீண்டும் மீண்டும் ஒரு விஷயத்தை சொல்ல வேண்டும். ஊடுருவல்காரர்கள் டெல்லியில்தான் உள்ளனர். வங்கதேச மக்களால் வெளியேற்றப்பட்ட ஒரு ஊடுருவல்காரரை மோடி வரவேற்று, அவரை சகோதரி (ஷேக் ஹசீனா) என்று அழைத்து வருகிறார். அனைவரின் வளர்ச்சிக்கும் பாடுபடுவதாகக் கூறும் மோடி, பீகார் தேர்தலில் ஒரு முஸ்லிம்களுக்குகூட சீட் வழங்கவில்லை. பீகார் தேர்தலுக்கான 101 வேட்பாளர்கள் பட்டியலை பாஜ வெளியிட்டது. இதில் ஒரு முஸ்லிம் வேட்பாளர் கூட இடம்பெறவில்லை’ என்றார்.
