Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நக்சல், தீவிரவாதத்தை ஒழிக்க மோடிதான் மீண்டும் வேண்டும்: குஜராத்தில் அமித்ஷா பிரசாரம்

போர்பந்தர்: ‘தீவிரவாதம், நக்சலிசத்தை ஒழிக்க மோடியை 3வது முறையாக பிரதமராக்குங்கள்’ என குஜராத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பிரசாரம் செய்தார். குஜராத்தில் போர்பந்தர் மக்களவை தொகுதி பாஜ வேட்பாளரான ஒன்றிய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை ஆதரித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்றைய பிரசார பொதுக்கூட்டத்தில் பேசியதாவது: நடந்து முடிந்த 2 கட்ட தேர்தல் மூலம், மீண்டும் மோடியிடம் ஆட்சியை தர நாட்டு மக்கள் முடிவு செய்திருப்பது தெளிவாக தெரிகிறது. நாட்டில் வறுமையை ஒழிக்கவும், தீவிரவாதம், நக்சலித்தை ஒழிக்கவும், நமது இளைஞர்கள் உலகத்துடன் இணைந்து செயல்பட ஒரு தளத்தை உருவாக்கி சிறந்த இந்தியாவை உருவாக்கவும் மோடியை 3வது முறையாக பிரதமராக்குங்கள்.

காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட போது, அங்கு ரத்த ஆறு ஓடும் என ராகுல் காந்தி கூறினார். ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் ரத்த ஆறு மட்டுமல்ல, கல் எறிந்து தாக்குதல் நடத்தக் கூட ஒருவரும் துணியவில்லை. நாட்டில் தீவிரவாதத்தையும், நக்சலிசத்தையும் ஒழிக்க மோடி உழைத்துள்ளார். மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது, பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு யார் வேண்டுமானாலும் ஊடுருவி குண்டு வைக்கலாம் என்ற நிலை இருந்தது. அதே போல் நினைத்து புல்வாமா, உரியில் பாகிஸ்தான் தீவிரவாத தாக்குதல் நடத்திய போது, அடுத்த 10 நாளில் பாகிஸ்தான் மண்ணில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி தீவிரவாதிகளை அழித்து நாட்டை காப்பாற்றியவர் மோடி.

வாக்கு வங்கியைப் பற்றி கவலைப்படாமல் மோடி கடுமையான முடிவுகளை எடுத்தார். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதை மோடி அரசு சாத்தியமாக்கியது. முகலாய அரசர் அவுரங்கசீப்பால் இடிக்கப்பட்ட காசி விஸ்வநாதர் கோயில் வழித்தடத்தை மோடி கட்டினார். மஹாகல் நடைபாதை உருவாக்கினார். பத்ரிநாத், கேதார்நாத்தை புதுப்பித்தார். சோம்நாத் கோயில் தங்கத் தகடுகள் பதிக்கப்படுகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.