திருச்சி: திருச்சி சிறுகனூரில் மதிமுக சார்பில் அண்ணா பிறந்த நாள் மாநாடு நேற்று நடந்தது. இதில் கட்சியின் பொது செயலாளர் வைகோ பேசியது:
திமுகவினரோடு பக்குவமாக நடந்து கொள்ளுங்கள். முதல்வர் ஸ்டாலின், அறிவித்த வாக்குறுதிகளை மட்டுமல்ல அறிவிக்காத வாக்குறுதிகளையும் நிறைவேற்றி வருகிறார். தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என சிலர் விவாதிக்கிறார்கள். 2026 தேர்தலில் திமுக கூட்டணி தான் வெற்றி பெறும். திமுக தனி பெரும்பான்மை பெறும் என்பதை இந்த மாநாட்டில் பிரகடனம் செய்கிறேன்.
திராவிட இயக்கங்களின் கொள்கைகளை காக்க, அண்ணா, கலைஞரின் லட்சியங்களை வென்றெடுக்க நாம் போராடுவோம். திமுகவை வேருடன் பிடுங்கி எறிய வேண்டும் என்று அமித்ஷா கூறுகிறார். என்ன நெஞ்சழுத்தம் இருந்தால் இவ்வாறு பேசுவீர்கள். அமித்ஷாவின் கனவு பகல் கனவாகும். அது ஒரு போதும் பலிக்காது. இவ்வாறு வைகோ பேசினார்.
மாநாட்டில், 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணி தமிழக மக்களின் பேராதரவோடு வெற்றி வாகை சூடிட மதிமுக பணியாற்றும். எல்லை தாண்டி வந்ததாக தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வதும், கோடிக்கணக்கில் அபராதம் விதிப்பதும் கண்டனத்துக்குரியது. இந்த செயல்களுக்கு ஒன்றிய அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். கீழடி ஆய்வு முடிவுகளை வெளியிட்டு அங்கீகாரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.