அமித்ஷா வீட்டு கதவை தட்டினால்தான் தமிழ்நாட்டு மக்களின் பிரச்னை தீரும்: ஜால்ரா போட்ட எடப்பாடி : செருப்பை காட்டிய தொண்டர்
குன்னம்: ‘அமித்ஷா வீட்டின் கதவை தட்டினால் தான் தமிழ்நாட்டு மக்களின் பிரச்னை தீரும்’ என்று குன்னத்தின் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியபோது, தொண்டர் ஒருவர் செருப்பை காட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. அரியலூர் சட்டமன்ற தொகுதியில் மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் பிரச்சாரம் மேற்கொள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வந்தார். அரியலூர் அண்ணா சிலை அருகே திறந்த வேனில் நின்று எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ‘அதிமுக கூட்டணி 200 தொகுதிக்கு மேல் வெற்றிப்பெற்று தனி பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சியமைக்கும்’ என்றார்.
தொடர்ந்து, கொள்ளிடம், ஜெயங்கொண்டத்திற்கு சென்று அவர் பிரசாரம் மேற்கொண்டார். அங்கு காமராஜரின் 123வது பிறந்தநாள் முன்னிட்டு அவரது உருவ படத்திற்கு எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அரியலூர், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளின் விவசாய சங்க பிரதிநிதிகளை நேரில் சந்தித்தார். அப்போது அவர்களது கோரிக்கையை கேட்டறிந்தார். பின்னர் விவசாயிகளின் மத்தியில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், ‘கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரமும், நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2500ம் அதிமுக ஆட்சியில் வழங்கப்படும்’ என்றார். பின்னர் விவசாயிகளுடன் சேர்ந்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார். அப்போது விவசாயிகள் தானியத்தால் உருவாக்கப்பட்ட பூங்கொத்து அவருக்கு அளித்து, மனுக்கள் கொடுத்தனர்.
அதன்பின், பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டமன்ற தொகுதிக்கு நேற்று வந்தார். குன்னம் பேருந்து நிறுத்தம் அருகே அவர் பேசுகையில், ‘அமித் ஷா பாகிஸ்தான் அமைச்சரல்ல, அவர் இந்தியாவின் உள்துறை அமைச்சர். அவரை நான் சந்தித்ததை கள்ளத்தனமாக சந்தித்ததாக உதயநிதி கூறுகிறார். அமித் ஷா வீட்டு கதவை தட்டினால் எந்த தவறும் இல்லை. அமித்ஷா வீட்டின் கதவை தட்டினால் தான் தமிழ்நாட்டு மக்களின் பிரச்னை தீரும்’ என்றார்.
எடப்பாடி பழனிசாமி பேசிக் கொண்டிருக்கும் போது, ஆலத்தூர் வட்டம் ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் தன்னுடைய காலில் அணிந்து இருந்த செருப்பை தூக்கி காட்டினார். இதைக் கண்ட அருகில் இருந்த போலீசார் அவரை அப்படியே காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விட்டனர். இதனால் அந்த இடத்தில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
எடப்பாடிக்கு காவி வேட்டி
சேலம் மாவட்ட திமுக முன்னாள் மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் சுகுமார் மற்றும் சூரமங்கலம் முன்னாள் இளைஞரணி அமைப்பாளர் அருண்பிரபாகரன் தலைமையில் திமுகவினர் நேற்று சேலம் பழைய பஸ் ஸ்டாண்ட அருகேயுள்ள தலைமை அஞ்சல் அலுவலகத்திற்கு வந்தனர். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜவுக்கு கொள்கை பரப்பு செயலாளராக மாறியிருப்பதாக கூறி அவருக்கு அஞ்சல் மூலம் காவி வேட்டி அனுப்பினர். இனிவரும் காலங்களில் அவர் வெள்ளை வேட்டி கட்ட வேண்டாம். அவருக்கு இனி காவி வேட்டிதான் பொருத்தமாக இருக்கும் என்றனர்.