சென்னை: தமிழர்களின் மீதான அவதூறு கருத்துக்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில் கூறியதாவது, பிரதமர் நரேந்திர மோடி, சமீபத்தில் மேற்கொண்ட தேர்தல் பிரசாரங்களில் தமிழர்களை இழிவுபடுத்தும் வகையில் வெளிப்படுத்திய கருத்துகள் மிகுந்த வருத்தத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளன.
ஒரு மக்களாட்சியின் தலைவராக, அனைத்து மாநிலங்களையும், அனைத்து மக்களையும் சமமாகக் கையாளுவது பிரதமரின் அடிப்படை பொறுப்பாகும். ஆனால், தேர்தல் நன்மைக்காக ஒரு மாநில மக்களை இழிவாகக் கூறுவது அரசியல் நாகரிகத்துக்கும், ஜனநாயகக் கொள்கைக்கும் எதிரானது. தமிழர்கள், உழைப்பும் அறிவும் இணைந்த மக்களாக உலகம் முழுவதும் மரியாதை பெற்றவர்கள்.
அவர்களை குறைத்து பேசுவது, தமிழ் மக்களின் மனதை மட்டும் அல்லாது, இந்திய ஒற்றுமையையே பாதிக்கும் வகையில் உள்ளது. தமிழ்நாடு எப்போதும் இந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பைச் செய்துள்ளது. இந்நிலையிலேயே, தமிழர்களின் மீதான அவதூறு கருத்துக்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை.பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக தமது கருத்துகளை திரும்பப்பெற்று, தமிழர்களிடம் தனது பேச்சுக் குறித்து மன்னிப்பு கேட்க வேண்டும்.
எதிர்காலத்தில் இதுபோன்ற பிரிவினை மற்றும் வெறுப்பை தூண்டும் பேச்சுக்களை தவிர்க்க வேண்டும். மாநிலங்களின் ஒற்றுமையையும், இனங்களிடையேயான நல்லிணக்கத்தையும் பாதுகாப்பது ஒன்றிய அரசின் பொறுப்பு என்பதை நினைவில் வைத்துக் கொண்டு பிரதமர் பேசவேண்டும். தமிழர்கள் மீது தாக்கம் ஏற்படுத்தும் எந்தவித செயலும், எந்தவித கருத்தும் கடுமையாகக் கண்டிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
 
  
  
  
   
