இது ரூ.15 லட்சம் அறிவிப்பு இல்லை... உண்மைதான்.... அமெரிக்கர்களுக்கு தலா ரூ.1.77 லட்சம்: டிரம்ப் அதிரடி அறிவிப்பு
வாஷிங்டன்: 2014ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் மோடி பேசுகையில், வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்து இருக்கும் பணத்தை மீட்டு ஒவ்வொரு இந்தியருக்கும் ரூ.15 லட்சம் வழங்கலாம் என்று பேசினார். அதை பின்னர் அவரே மறுத்தார். ஆனால் இந்தியாவில் நடந்ததோ இல்லையோ, அமெரிக்காவில் நடந்து இருக்கிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் அனைத்து அமெரிக்கர்களுக்கும் தலா ரூ.1.77 லட்சம் நிதி அவர்களது வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் என்று அறிவித்து இருக்கிறார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், ‘இறக்குமதி வரிகள் மூலம் அமெரிக்காவுக்கு கோடிக்கணக்கான டாலர்கள் வருவாய் கிடைத்து வருகிறது. இந்த வருவாயைக் கொண்டு நாட்டின் கடனை அடைப்பதுடன், மக்களுக்கு ஈவுத்தொகையும் வழங்கப்படும். ‘டேரிஃப் டிவிடெண்ட்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின் கீழ், பணக்காரர்களை தவிர்த்து மற்ற பெரும்பாலான அமெரிக்கர்களுக்கு தலா 2,000 டாலர் (இந்திய ரூபாயில் 1,77,331) வழங்கப்படும் ’ என்று கூறியுள்ளார்.

