Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

அமெரிக்க அரசியலில் பரபரப்பு மீண்டும் இணைந்த டிரம்ப்-எலான் மஸ்க்

கிளென்டேல்: அமெரிக்காவில் கருத்து மோதலால் பிரிந்த அதிபர் டிரம்ப்பும், தொழில் அதிபர் எலான் மஸ்க்கும் மீண்டும் இணைந்துள்ளனர். அமெரிக்க அதிபராக இரண்டாம் முறை பொறுப்பேற்ற டிரம்ப்புக்கு, பிரபல தொழில் அதிபர் எலான் மஸ்க் நெருங்கிய நண்பராக இருந்தார். டிரம்ப் பிரச்சாரத்திற்கு ரூ.2500 கோடிக்கும் அதிகமாக நன்கொடை அளித்தார். டிரம்ப் மீண்டும் பதவிக்கு வந்த பிறகு, அரசாங்க நிதி வீணாவதைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்ட புதிதாக உருவாக்கப்பட்ட அரசாங்க செயல்திறன் துறையை வழிநடத்த மஸ்க்கை நியமித்தார். இந்தத் துறை கூட்டாட்சி நிறுவனங்களில் ஆயிரக்கணக்கான வேலைகளை காலி செய்தது.

அதன்பின் டிரம்ப் கொண்டு வந்த வரி மற்றும் செலவு மசோதாவை மஸ்க் எதிர்த்தபோது அவர்களின் உறவு மோசமடைந்தது. மஸ்க் இந்த சட்டத்தை முற்றிலும் பைத்தியக்காரத்தனமானது மற்றும் அழிவுகரமானது என்று அழைத்தார். அவரை டிரம்ப்பும் பகிரங்கமாக விமர்சனம் செய்தார். இறுதியில் டிரம்ப்புக்கு எதிராக கட்சி தொடங்கப்போவதாக மஸ்க் அறிவித்தார். அதன்பின் இருவரும் அமைதியானார்கள். இந்த சூழலில் நேற்றுமுன்தினம் அரிசோனா மாகாணம் கிளென்டேல் நகரில் ஸ்டேட் பார்ம் மைதானத்தில் நடந்த டிரம்ப்பின் தீவிர ஆதரவாளருளும், செப்.10ல் சுட்டுகொல்லப்பட்டவருமான சார்லி கிர்க்கின் பொது இறுதி சடங்கு நிகழ்ச்சியில் இருவரும் கலந்து கொண்டனர். அப்போது டிரம்ப்பும், மஸ்க்கும் அருகருகே அமர்ந்து கைகுலுக்கி பேசினார்கள். இதுபற்றி மஸ்க் தனது எக்ஸ் பதிவில்,’ சார்லிக்காக’ என்று குறிப்பிட்டார்.

இதுபற்றி உதடு அசைவை வைத்து பேசுவதை கண்டுபிடிக்கும் நிபுணர் நிக்கோலா ஹிக்லிங் கூறுகையில்,’ டிரம்ப் அருகே வந்து அமர்ந்து கைகுலுக்கிய மஸ்க்கை பார்த்து, எப்படி இருக்கிறீர்கள்? என்று டிரம்ப் கேட்டார். பின்னர் சரி, எலான், நீங்கள் என்னுடன் மீண்டும் பேச விரும்புவதாக நான் கேள்விப்பட்டேன். மீண்டும் எப்படி நாம் நட்பு பாதைக்கு திரும்புவது என்று யோசித்துப் பார்ப்போம்’ என்றார். அதற்கு பதில் அளிக்கும் விதமாக மஸ்க் தலையை அசைத்தார். அப்போது மஸ்கின் கைகளை தட்டியபடி,’ நான் உன்னை மிஸ் செய்கிறேன்’ என்று டிரம்ப் கூறியதாக அவர் கூறினார். சார்லி கிர்க்கின் நினைவு நிகழ்ச்சியில் இருவரும் நெருங்கியிருப்பது அமெரிக்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

* நான் மன்னிக்கிறேன்

டிரம்ப் ஆதரவாளர் சார்லி கிர்க் இறுதி சடங்கு நிகழ்ச்சியில் அவரது மனைவி எரிகா பேசும் போது,’எனது கணவர் வருத்தப்படாமல் இந்த உலகத்தை விட்டுச் சென்றதில் ஆறுதல் அடைகிறேன். அவரைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட நபரை மன்னிக்க விரும்புகிறேன். என் கணவர் சார்லி, அவர் தனது உயிரைப் பறித்தவரைப் போலவே இளைஞர்களையும் காப்பாற்ற விரும்பினார். நான் அவரை மன்னிக்கிறேன்’ என்றார். உட்டாவைச் சேர்ந்த 22 வயது டைலர் ராபின்சன் மீது கிர்க்கைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.