புதுடெல்லி: அமெரிக்காவில் உள்ள நிறுவனத்துடன் ஆர்எஸ்எஸ் ஒப்பந்தம் செய்துள்ளதன் மூலம் தேசிய நலனை அது காட்டி கொடுத்துள்ளது என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது: சில தினங்களுக்கு முன் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேசும்போது, ஆர்எஸ்எஸ் ஒரு பதிவு செய்யப்பட்ட அமைப்பு அல்ல,அதனால் வரிகள் எதுவும் செலுத்துவதில்லை என்று தெரிவித்தார்.
தற்போது அமெரிக்க நாட்டில் தனது நலன்களை பாதுகாப்பதற்காக சர்வதேச சட்ட நிறுவனமான ஸ்கொயர் பேட்டன். போக்ஸ் நிறுவனத்துடன் ஆர்எஸ்எஸ் ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்காக கணிசமான தொகையை செலவிட்டுள்ளது. இதே ஸ்கொயர் பேட்டன் போக்ஸ் நிறுவனம் பாகிஸ்தானின் அதிகாரப்பூர்வ பரப்புரை குழுவில் ஒன்றாகும். கடந்த ஜனவரி முதல் செப்டம்பர் வரை பரப்புரை நிறுவனத்திற்கு ஆர்எஸ்எஸ் 3.30 லட்சம் அமெரிக்க டாலர்களை வழங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க செனட் மற்றும் பிரதிநிதிகள் சபையில் அதிகாரிகளிடம் பரப்புரை செய்வதற்காக ஸ்கொயர் பேட்டன் போக்ஸை தனது பரப்புரை நிறுவனமாக ஆர்எஸ்எஸ் பதிவு செய்துள்ளது. அமெரிக்காவின் பரப்புரை நிறுவனத்துடன் ஆர்எஸ்எஸ் தொடர்பு வைத்துள்ளது என்று வெளியான செய்தியின் மூலம் ஆர்எஸ்எஸ் தேசிய நலனை காட்டி கொடுத்துள்ளது. அது ஒரு போலி தேசியவாத அமைப்பாகும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
