மிச்சிகன்: அமெரிக்காவில் தேவாலயத்திற்குள் டிரக்கை ஓட்டிச் சென்று புகுந்த மர்ம நபர் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தி தீ வைத்ததில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 8 பேர் காயமடைந்தனர். அமெரிக்காவில் வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. வடக்கு கரோலினா, டெக்சாஸ் மாகாணங்களைத் தொடர்ந்து, மூன்றாவது பெரிய துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது. மிச்சிகன் மாகாணம், கிராண்ட் பிளாங்க் டவுன்ஷிப்பில் உள்ள மோர்மன் தேவாலயத்தில் கடந்த 28ம் தேதி காலை 10.25 மணியளவில் ஞாயிறு சிறப்புப் பிரார்த்தனை நடைபெற்றது. குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கானோர் இதில் பங்கேற்றிருந்தனர்.
அப்போது ஒருவர் பிக்கப் வாகனத்தால் தேவாலயத்தின் முன்பக்க கதவுகளை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்தார். பின்னர், தன்னிடமிருந்த அதிநவீன துப்பாக்கியால் அங்கிருந்த கிறிஸ்தவர்கள் மீது கண்மூடித்தனமாக சுட்டார். அத்துடன், தான் கொண்டு வந்திருந்த பெட்ரோல் போன்ற எரிபொருளை ஊற்றி தேவாலயத்திற்கு தீ வைத்தார். தகவலறிந்து சில நிமிடங்களில் காவல்துறையினர் அங்கு விரைந்தனர். பின்னர் துப்பாக்கிச்சூடு நடத்தி தாக்குதல் நடத்திய நபரை சுட்டுக்கொன்றனர். துப்பாக்கி சூடு நடத்திய நபர், அண்டை நகரமான பர்ட்டனை சேர்ந்த தாமஸ் ஜேக்கப் சான்ஃபோர்ட் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 4 பேர் பலியானார்கள். மேலும் 8க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தீ விபத்தில் தேவாலயம் முற்றிலும் சேதமடைந்தது.