Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காக செல்வதற்கான இந்திய மருத்துவரின் பரிந்துரை கடிதத்தை தாக்கல் செய்ய வேண்டும்: செந்தில் பாலாஜியின் சகோதரருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அமெரிக்காவில் சிகிச்சை பெறுவதற்காக இந்திய மருத்துவர் அளிக்கும் பரிந்துரை கடிதத்தை தாக்கல் செய்ய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதய சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல அனுமதி கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் தாக்கல் செய்த மனுவை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து அசோக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை தரப்பில், விசாரணை அதிகாரி பலமுறை சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஒருமுறை கூட அசோக்குமார் ஆஜராகவில்லை என்றும் அவர் அமெரிக்கா செல்ல அனுமதிக்க கூடாது என்றும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், அமெரிக்காவில் சிகிச்சை பெறுவதற்கு இந்திய மருத்துவரின் பரிந்துரையை பெற வேண்டியது அவசியம். அவ்வாறு மருத்துவர் பரிந்துரைத்தது தொடர்பான ஆவணங்களை இதுவரை நீதிமன்றத்தில் அசோக்குமார் ஏன் தாக்கல் செய்யவில்லை என்று கேட்டனர்.

இது தொடர்பாக அசோக் குமார் தரப்பில் பதில் அளிக்க கால அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், அமெரிக்கா சென்று சிகிச்சை மேற்கொள்ள தேவையான இந்திய மருத்துவரின் பரிந்துரை கடிதத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு அசோக் குமாருக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 5ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.