Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அமெரிக்காவின் 50% வரிவிதிப்பால் தூத்துக்குடியில் ரூ.5,000 கோடி கடல் மீன்கள் ஏற்றுமதி பாதிப்பு

இந்தியா கடல் உணவு ஏற்றுமதி செய்யும் நாடுகளில் முன்னிலையில் உள்ளது. கடந்த 2023-24ல் இந்தியாவில் இருந்து அமெரிக்கா, ஜப்பான், சீனா, ஐரோப்பிய நாடுகள், தென்கிழக்கு ஆசிய நாடுகள், மத்திய கிழக்கு நாடுகளுக்கு கடல் உணவு அதிகம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதில் பதப்படுத்தப்பட்ட இறால், மீன், சிங்கி இறால், கணவா, நண்டு, உள்ளிட்ட மீன் இனங்கள் உணவுகளாக ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

2023-24ல் ரூ.60 ஆயிரத்து 523 கோடி மதிப்பிலான 17 லட்சத்து 81 ஆயிரத்து 602 டன் கடல் உணவுகள் ஏற்றுமதி செய்யப்பட்டது. இதில் அதிகப்படியாக பதப்படுத்தப்பட்ட இறால்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு மட்டும் ரூ.20,892 கோடி மதிப்பில் 3 லட்சத்து 29 ஆயிரத்து 192 டன் கடல் உணவு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

இந்தாண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரை சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு பதப்படுத்தப்பட்ட இறால் ஏற்றுமதி குறைந்துள்ளது. அதனை ஈடு செய்யும் வகையில் அமெரிக்காவிற்கு பதப்படுத்தப்பட்ட இறால் ஏற்றுமதி அதிகரித்து வந்துள்ளது. இதனால் கடல் உணவு ஏற்றுமதிக்கு அமெரிக்கா நல்ல சந்தையாக விளங்கி வந்த நிலையில் அமெரிக்கா இந்திய பொருட்களுக்கு 50% வரி விதித்து உள்ளது. இதனால் கடல் உணவு ஏற்றுமதி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து தமிழக கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் நிர்வாகியான தூத்துக்குடி செல்வின் கூறியதாவது:

அமெரிக்கா 50% வரி விதிப்பால் இந்திய ஏற்றுமதி பெரும் அளவு பாதிக்கப்படும். இந்தியாவில் இருந்து அதிகப்படியான கடல் உணவு அமெரிக்காவிற்கு ஏற்றுமதியாகிறது. இதில் இறால் மீன்கள் ஏற்றுமதி மட்டும் பெரிய பங்கு வகிக்கிறது.  இந்த வரிவிதிப்பால் பல மீனவர்களின் வாழ்வாதாரம். பண்ணை இறால் தொழிலாளர்கள், பண்ணை இறால் விவசாயிகள் என ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்படுவர். இவ்வளவு பெரிய வரிவிதிப்பு அவர்களால் தாங்க முடியாத ஒரு சூழல் ஏற்படும்.

இறால் ஏற்றுமதியில் நாம் போட்டியை இழந்து விடுவோம். நமக்கு 50% வரி விதிப்பால் நமது போட்டியாளர்கள் நாடான இந்தோனேசியா, ஈக்வடார் மற்றும் இதர நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 17% அல்லது 18% தான் வரி இருக்கிறது. இந்திய இறாலின் விலை அமெரிக்க சந்தையில் அதிகரிப்பதால் அமெரிக்காவில் இந்திய இறால் வாங்கும் வியாபாரிகள் அனைவரும் ஆர்டர்களை கேன்சல் செய்கின்றனர். எந்த கன்டெய்னர்களையும் இறக்குமதி செய்ய வேண்டாம்.

இறக்குமதி செய்தாலும் நாங்கள் எடுக்க மாட்டோம் இல்லையென்றால் இந்த 50% வரியை ஏற்றுமதி செய்யும் நீங்களே கட்டுங்கள் நாங்கள் கட்ட மாட்டோம் என்கின்றனர். இறால் மீன் தொழிலே குறைந்த லாபம் உடைய தொழில். இதற்கு 50% வரி என்பது ஏற்றுமதியாளர்களால் முடியாத காரியம். ஒன்றிய அரசு அமெரிக்காவுடன் பேசி இந்த வரியை நீக்க வேண்டும். ஏனென்றால் அமெரிக்க பொருளாதாரத்தை சார்ந்தே கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் கடந்த 20 ஆண்டுகளாக பயணித்து வருகிறோம்.

உடனடியாக எங்களின் இறால் சந்தையை வேறு நாடுகளுக்கு மாற்றுவதற்கு நீண்ட நாட்கள் ஆகும். ஏற்கனவே இறால் உணவை மற்ற நாட்டு சந்தைகளுக்கும் அனுப்பிக் கொண்டுதான் இருக்கிறோம். அந்த நாட்டிற்கே இறால் மீன்களை இன்னும் அதிகம் கொடுக்கும்போது விலையை குறைத்து கேட்பார்கள். இந்த சூழ்நிலை வந்தால் மீனவர்களும், மீன் பண்ணை விவசாயிகளும் பாதிக்கப்படுவர்.

இந்தியாவில் கடல் உணவு கடந்த 20 வருடமாக நல்ல வளர்ச்சியை எட்டி உள்ளது. கடந்த 2010ல் ெவறும் ரூ.4500 கோடியாக இருந்த கடல் உணவு ஏற்றுமதி இன்று ரூ.64 ஆயிரம் கோடியை எட்டியுள்ளது. இதில் அமெரிக்காவிற்கு மட்டும் ஏற்றுமதி ரூ.21 ஆயிரம் கோடி. இந்த வரிவிதிப்பால் அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் ரூ.21 ஆயிரம் கோடி கடல் உணவுப் பொருட்களை ஒரே இரவில் நிறுத்தம் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் மட்டும் ரூ.5,000 கோடி கடல் மீன்கள் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. இறால் பண்ணை விவசாயிகள் தற்போது இறால் உற்பத்தியை குறைத்துள்ளனர். அமெரிக்காவில் தான் பெரிய அளவுடைய இறால் வாங்குவார்கள். மற்ற நாடுகளில் சிறிய அளவிலான இறால்தான் வாங்குவார்கள் பெரிய இறால் வளர்த்தால் தான் விவசாயிகளுக்கும், மீனவர்களுக்கு லாபத்தை கொடுக்கக் கூடியது. சிறிய அளவிலான இறால்களை வளர்க்கும் போது அவர்களும் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது.

சமீபத்தில் நாங்கள் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்த கன்டெய்னர்கள் பாதி தூரம் சென்ற நிலையில், அவற்றை திரும்ப பெற்றுக் கொள்ளுங்கள் என்று அமெரிக்க இறக்குமதியாளர்களிடம் இருந்து எங்களுக்கு இமெயிலில் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. இதை மீறி அமெரிக்காவிற்கு இறால் மீன் வந்தால் அதை நாங்கள் எடுக்க மாட்டோம் என்று நிர்ப்பந்திகின்றனர்.

இதனால் 500 டன் எடையிலான 50 முதல் 60 கன்டெய்னர்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் மொத்தம் 25 நிறுவனங்கள் கடல் உணவுகள் ஏற்றுமதி செய்து வருகிறது. ஒவ்வொரு நிறுவனத்திலும் சுமார் ஆயிரம் முதல் 1,500 தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர் இந்தியா முழுவதும் பல லட்சம் தொழிலாளர்கள் இதில் பணியாற்றுகின்றனர். இந்த வரிவிதிப்பால் 50 முதல் 60% தொழிலாளர்களுக்கு நாங்கள் வேலை கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

* பாதி வழியில் 500 டன்னுடன் கன்டெய்னர்களை திருப்பி அனுப்புவதால் ஏற்றுமதியாளர்கள் அதிர்ச்சி

* கடல் உணவு ஏற்றுமதி செய்யும் 15 நிறுவனங்கள்

அமெரிக்காவுக்கு கடல் உணவுகளை ஏற்றுமதி செய்யும் சுமார் 25 நிறுவனங்கள் தமிழகத்தில் உள்ளன. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 15 நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. தூத்துக்குடியில் இருந்து பதப்படுத்தப்பட்ட

இறால், கணவாய், மீன், நண்டு உள்ளிட்ட பல்வேறு கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அமெரிக்காவுக்கு ஒரு மாதத்திற்கு சுமார் 20 கன்டெய்னர்களில் கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதி செய்வதாக கூறப்படுகிறது. இந்த நிறுவனங்கள் புதிய வரிவிதிப்பு காரணமாக தற்போது பாதிப்பை சந்தித்து வருகின்றன.

* மானியம் வேண்டும் கடல் உணவு ஏற்றுமதியாளர்கள்

சங்கத்தின் சார்பாக ஒன்றிய அரசிடம் கோரிக்கைகள் அளிக்கப்பட்டுள்ளன. ஒன்றிய அரசும் பரிசீலிப்பதாக உறுதியளித்துள்ளதாக கூறப்படுகிறது. அவர்களிடம் முக்கியமாக கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் வைத்த கோரிக்கை, மானியத்துடன் பொருளாதார உதவி செய்ய வேண்டும். குறைந்த வட்டியில் வங்கிக் கடன் வழங்க வேண்டும். அமெரிக்காவுடன் பேசி 50% வரியை நீக்க முயற்சிக்க வேண்டும் என்பதாகும்.

* ஏற்றுமதியை கைவிடும் நிறுவனங்கள்

அமெரிக்காவின் 50% வரி விதிப்பின் மூலம் தூத்துக்குடி, ராமநாதபுரம், நெல்லை, குமரி மாவட்டங்களில் மட்டும் பெருமளவு கடல் உணவு ஏற்றுமதி குறைந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் சார்பு தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 10க்கும் மேற்பட்ட ஏற்றுமதியாளர்கள் இந்த கடல் உணவு ஏற்றுமதியை கைவிடும் நிலை உருவாகியுள்ளது.

* ரூ.3,214 கோடிக்கு ஏற்றுமதி

தூத்துக்குடி துறைமுகம் வழியாக மட்டும் கடந்த 2023-24ம் ஆண்டு ரூ.3,214 கோடி மதிப்பிலான 73,822 டன் கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இதில் அமெரிக்காவுக்கு மட்டும் இறால் இனங்கள் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.