Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அமெரிக்காவின் புதிய வரி விதிப்பால் இந்தியாவில் வேலை இழப்பு அதிகரிக்கும்? பொருளாதார நிபுணர்கள் கருத்து

சென்னை: அமெரிக்காவின் புதிய வரி விதிப்பால் இந்தியாவில் வேலை இழப்பு அதிகரிக்கும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சில மாதங்களுக்கு முன்பு பல நாடுகள் மீது வரிகளை அறிவித்திருந்தார். ஆனால், பேச்சுவார்த்தைக்கு பிறகு அதனை நிறுத்தி வைத்தார். இந்நிலையில் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என டிரம்ப் நேற்று முன்தினம் அறிவித்துள்ளார். இதன் மூலம் வேலை இழப்பு அதிகம் ஏற்படும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக, தொழில் முனைவோர் கூட்டமைப்பு ரகுநாதன் கூறியதாவது: இந்த வரி விதிப்பு ஒரு பேரிடியாக உள்ளது. இந்தியாவின் வெளிநாட்டு உறவு, கொள்கைகள், முயற்சிகளுக்கு இது ஒரு தோல்வி. பிரதமர் மோடி உள்ளிட்ட அதிகாரிகள் பலமுறை டிரம்ப் மற்றும் அமெரிக்க அதிகாரிகளுடன் நேரில் சந்தித்து இந்த வரி விதிப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அது தோல்வியில் முடிந்தால் என்ன பலன். எந்த ஒரு முயற்சியாக இருந்தாலும் இலக்கை நோக்கி நகரவேண்டும். தற்போது, இந்தியாவில் வேலைவாய்ப்பு அதிகரித்து வருகிறது.

சேவை, உற்பத்தி துறைகளில் தான் வேலைவாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஆனால், சேவைத் துறையில் தற்போது அதிகமான வேலை இழப்புகள் ஏற்படுகிறது. உற்பத்தித் துறையில் புதிதாக தொடங்கப்பட்ட பல நிறுவனங்கள் நிதி இல்லாமல் இருக்கின்றன. இதுபோன்று இருக்கும் நிலையில் அமெரிக்கா வரி விதிப்பை ஒன்றிய அரசு தடுத்து இருக்க வேண்டும். அமெரிக்க அதிபர் டிரம்ப் 6 மாதங்களாக வரி விதிப்பு பற்றி பேசி வருகிறார்.

ஜூலை மாதமே இது செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால், ஒரு மாதம் தள்ளி இன்று முதல் வரி அதிகரிக்க உள்ளது. இங்கிலாந்து, சிங்கப்பூர், வியட்நாம் உள்ளிட்ட நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, இந்தியாவுடன் மேற்கொள்ளவில்லை என்றால் இங்கு இருக்கும் தொழில்முனைவோருக்கு இது நல்ல செய்தி கிடையாது. அமெரிக்காவுக்கு அதிகமாக ஏற்றுமதி செய்கிறோம். 87 பில்லியன் டாலர் நாம் ஏற்றுமதி செய்யும்போது 47 பில்லியன் டாலர் அங்கு இருந்து இறக்குமதி செய்வதை விட அந்நிய செலாவணியை ஈட்டிக்கொண்டு இருக்கிறோம்.

இந்த வரி விதிப்பால் இயந்திர பாகங்கள், பிரேக்குகள், கியர் அசெம்ப்ளிகள், வயரிங் என உதிரி பாகங்கள் ஏற்றுமதியை சீர்குலைக்கக் கூடும். மேலும், டெலிகாம் மென்பொருட்கள், இரும்பு மற்றும் அதன் தொடர்பான பொருட்கள், துணிகள், ஆயத்த ஆடைகள், தோல் பொருட்கள், மாணிக்கம், ரத்தினங்கள், தங்கம் போன்ற அதிக உற்பத்தி பணியாளர்களை கொண்டு தொழில்கள் மூலம் மேற்கொள்ளும் பொருட்கள் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது கூடுதல் வரி விதிப்பால் இந்த துறைகளில் வேலை இழப்பு அதிகம் ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.