அமெரிக்கா தடையால் வரும் 21ம் தேதி முதல் ரஷ்யாவிடம் இருந்து நேரடி எண்ணெய் கொள்முதலை இந்தியா நிறுத்துகிறது
புதுடெல்லி: கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா மீது 50 சதவீத வரிகளை விதித்தார். ரஷ்யாவின் மலிவு விலை எண்ணையை வாங்குவதன் மூலம் உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு இந்தியா நிதியளிப்பதாக டிரம்ப் குற்றம் சாட்டினார். இதனால் இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளில் விரிசல் ஏற்பட்டது. ரஷ்யாவின் மிக பெரிய எண்ணெய் நிறுவனங்களான ரோஸ்நெப்ட், லூகோயில் போன்றவற்றுக்கு அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்தது.
அமெரிக்காவின் தடைகளுங்கு இணங்கி வரும் 21ம் தேதி முதல் ரஷ்ய நிறுவனங்களிடம் இருந்து நேரடி எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் நிறுத்த முடிவு செய்துள்ளன. கடல்சார் புலனாய்வு நிறுவனமான கெப்ளர் வெளியிட்ட தகவலின்படி இந்திய நிறுவனங்களின் முடிவினால் அடுத்த மாதம் முதல் ரஷ்யாவிடம் இருந்து பெறப்படும் கச்சா எண்ணெயின் இறக்குமதியில் கடுமையான சரிவு ஏற்படும். அதன் பின் இடைத்தரகர்கள் மற்றும் மாற்று வர்த்தக வழிகள் மூலம் 2026ம் ஆண்டு தொடக்கத்தில் படிப்படியாக அது மீட்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரோஸ்நெப்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ள ரிலையன்ஸ் நிறுவனம் ரஷ்ய கச்சா எண்ணைய் வாங்குவதை நிறுத்தும் என கூறப்படுகிறது. அரசு கட்டுப்பாட்டில் உள்ள இரண்டு சுத்திகரிப்பு நிறுவனங்களான மங்களூரு சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ், எச்பிசிஎல்-மித்தல் எனர்ஜி லிமிடெட் ஆகியவை ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளன. ஆனால் நயாரா எனர்ஜியின் வடினார் சுத்திகரிப்பு ஆலை தொடர்ந்து ரஷ்ய கச்சா எண்ணையை இறக்குமதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கெப்ளரின் முன்னணி ஆராய்ச்சியாளர் சுமித் ரிட்டோலியா,‘‘ அக்டோபர் மாதத்தில் இந்தியாவின் முன்னணி கக்சா எண்ணெய் சப்ளையராக ரஷ்யா முதலிடத்தில் இருந்தது. அதை தொடர்ந்து ஈராக், சவுதி அரேபியா இருந்தன. பெரும்பாலான இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் அமெரிக்கத் தடைகளுக்கு இணங்கி, ரோஸ்நெப்ட் மற்றும் லுகோயிலில் இருந்து நேரடி கச்சா எண்ணெய் கொள்முதலை நிறுத்தவோ அல்லது குறைக்கவோ செய்யும்.
ரஷ்ய விநியோகத்தை ஈடுசெய்ய, இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் மத்திய கிழக்கு, லத்தீன் அமெரிக்கா, மேற்கு ஆப்பிரிக்கா, கனடா, அமெரிக்கா ஆகிய மாற்று இடங்களிலிருந்து கொள்முதலை அதிகரித்து வருகின்றன. இந்தியாவிற்கான அமெரிக்க கச்சா எண்ணெய் இறக்குமதி அதிகரித்துள்ளது’’ என்றார்.
