அமெரிக்கா கொடுக்கும் அழுத்தத்தால் ரஷ்யாவின் எண்ணெய் இறக்குமதியை குறைக்க இந்தியா முடிவு?: ஒன்றிய அரசு வட்டாரம் தகவல்
புதுடெல்லி: உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 2022ம் ஆண்டு படையெடுத்ததைத் தொடர்ந்து, ரஷ்யா தனது கச்சா எண்ணெயை சர்வதேச சந்தையில் பெரும் தள்ளுபடி விலையில் விற்பனை செய்தது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, இந்தியா அதிக அளவில் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வந்தது. இந்த நிலையில், அமெரிக்காவின் அழுத்தம் மற்றும் மாறும் சந்தை நிலவரங்கள் காரணமாக, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை படிப்படியாகக் குறைக்க இந்தியா முடிவு செய்துள்ளது.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் மீண்டும் பதவியேற்ற பிறகு, ரஷ்யாவுடனான இந்தியாவின் எரிசக்தி மற்றும் பாதுகாப்பு உறவுகளைக் காரணம் காட்டி, இந்தியப் பொருட்களுக்கு 50% வரை கூடுதல் வரி விதித்துள்ளார். மேலும், கடந்த 24ம் தேதி ஐ.நா. பொதுச் சபையில் பேசிய டிரம்ப், ‘இந்தியாவும், சீனாவும்தான் உக்ரைன் போருக்கு எண்ணெய் வாங்குவதன் மூலம் முக்கிய நிதியளிப்பாளர்களாக உள்ளனர்’ என்று கடுமையாகக் குற்றம் சாட்டியிருந்தார்.
ரஷ்யா வழங்கும் தள்ளுபடிகள் கணிசமாகக் குறைந்துள்ளதாலும், இந்தியா தனது எரிசக்திப் பாதுகாப்பை உறுதிசெய்ய அமெரிக்கா, பிரேசில் போன்ற பிற நாடுகளிலிருந்து இறக்குமதியை அதிகரித்துள்ளதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்தக் குறைப்பு நடவடிக்கை படிப்படியாக மேற்கொள்ளப்படும் என்றும், நவம்பர் மாதத்திற்கான எண்ணெய் கொள்முதல் ஆர்டர்கள் ஏற்கனவே குறைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, சவுதி அரேபியாவும் இந்தியாவிற்குக் கூடுதல் தள்ளுபடிகளை வழங்கி, நீண்ட கால ஒப்பந்தங்களை மேற்கொள்ள முயன்று வருவதாக ஒன்றிய அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.