Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

அமெரிக்காவின் தொடர் எதிர்ப்பால் ரஷ்யாவிடம் இந்தியா இனி எண்ணெய் வாங்காது: பிரதமர் மோடி உறுதி அளித்ததாக அதிபர் டிரம்ப் அறிவிப்பால் சர்ச்சை

வாஷிங்டன்: ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தும் என்று பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்க அதிபராக 2வது முறையாக பொறுப்பேற்ற டிரம்ப், இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் தங்கள் நாட்டு பொருட்களுக்கு அதிக வரி விதிப்பதாக குற்றம்சாட்டினார். இதையடுத்து, உலக நாடுகள் விதிக்கும் வரிக்கு ஏற்ப பதில் வரி விதிக்கப்படும் என்று கூறிய அவர், அதற்கான பட்டியலை வெளியிட்டார். முதற்கட்டமாக இந்திய பொருட்கள் மீது 25% வரி விதித்தார்.

இது ஆகஸ்ட் 7ம் தேதி அமலுக்கு வந்தது. அத்துடன், ரஷ்யாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதாக கூறி கூடுதலாக 25% வரி விதித்தார். இது ஆகஸ்ட் 27ம் தேதி அமலுக்கு வந்தது. இதன்மூலம், இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் மீது 50% வரி விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்தபோதிலும், ரஷ்யாவில் இருந்து இந்தியா தொடர்ந்து பெட்ரோலிய பொருட்களை வாங்கி வருவது ஒரு முக்கிய பிரச்னையாக மாறியுள்ளது. இதன் காரணமாக இந்தியா-அமெரிக்கா இடையிலான உறவுகளில் கடுமையான பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் தனது ஓவல் அலுவலகத்தில் அதிபர் டிரம்ப் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அதிபர் டிரம்ப்,” இந்தியா ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதில் அமெரிக்கா மகிழ்ச்சி அடையவில்லை. அத்தகைய கொள்முதல்கள் அதிபர் புடினின் போருக்கு நிதியளிப்பதற்கு உதவுகின்றது. பிரதமர் மோடி என்னுடைய நண்பர். எங்களுக்கு ஒரு சிறந்த உறவு இருக்கிறது. அவர் ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்குவதில் எங்களுக்கு விருப்பம் இல்லை. ஏனென்றால் அது ரஷ்யா அபத்தமான போரை தொடர அனுமதிக்கிறது.

சுமார் 15 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்தியா எண்ணெய் வாங்குவதில் நான் மகிழ்ச்சியடையவில்லை. மேலும் ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்க மாட்டோம் என்று மோடி எனக்கு உறுதியளித்திருக்கிறார். இது ஒரு முக்கியமான படியாகும். இந்தியா உடனடியாக கொள்முதலை குறைக்க முடியாமல் போகலாம். ஆனால் செயல்முறை தொடங்கிவிட்டது. செயல்முறை விரைவில் முடிவடையும். இப்போது சீனாவையும் அதே காரியத்தை செய்ய வைக்க வேண்டும்.

ரஷ்யாவிடம் இந்தியா எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் என்று கூறுவது அதிபர் புடினுக்கு உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கு நிதி அழுத்தம் கொடுப்பதற்காக மட்டும் தான். அதிபர் புடின் உக்ரைனியர்களை கொல்வதை நிறுத்த வேண்டும் மற்றும் ரஷ்யர்களை கொல்வதை நிறுத்த வேண்டும். ஏனெனில் அவர் நிறைய ரஷ்யர்களை கொல்கிறார். இது ஒரு வாரத்தில் முடிந்திருக்க வேண்டிய போர். இப்போது அது நான்காவது ஆண்டில் நுழைகிறது. ரஷ்யா உக்ரைன் போர் முடிந்த பிறகு ரஷ்யாவுடன் இந்தியா எரிசக்தி பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கலாம்.

இந்திய பிரதமர் ஒரு சிறந்த மனிதர். அவர் டிரம்பை நேசிக்கிறார். அன்பு என்ற வார்த்தையை நீங்கள் வேறுவிதமாக எடுத்துக்கொள்ள நான் விரும்பவில்லை. அவரது அரசியல் வாழ்க்கையை நான் அழிக்க விரும்பவில்லை” என்றார். டிரம்ப்பின் இந்த அறிவிப்பு பல சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவின் கொள்கை முடிவை டிரம்ப் அறிவிக்கலாமா? என்றும் டிரம்ப்பை பார்த்து பிரதமர் மோடி அஞ்சுகிறார் என்றும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி உள்ளன.

ரஷ்யா குறைந்த விலையில் கச்சா எண்ணெய் விற்பதால் அதை தொடர்நது இந்தியா வாங்கி வருகிறது. தற்போது, ரஷ்யாவிடம் இந்தியா எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால், அதிக விலை கொடுத்து சர்வதேச சந்தையில வாங்க வேண்டி வரும். இதனால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை கடுமையாக அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

* ‘இந்தியாவின் நம்பகமான எரிசக்தி கூட்டாளி’

இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ் கூறுகையில், “உலக சந்தையில் ரஷ்ய கச்சா எண்ணெய் மிகவும் செலவு குறைந்த விருப்பமாக இருக்கிறது. மேலும் இந்திய அரசானது முதலில் இந்த நாட்டின் தேசிய நலன்களை கருத்தில் கொண்டு இந்த விவகாரங்களை கையாள்கிறது.

இந்தியா உடனான ரஷ்யாவின் எரிசக்தி உறவுகள் இந்தியாவின் தேசிய நலன்களுடன் ஒத்துப்போகின்றன. ரஷ்யா இந்தியாவின் மிகவும் நம்பகமான எரிசக்தி கூட்டாளியாகும். பாதுகாப்பு, வர்த்தகம், இணைப்பு மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் ஒட்டுமொத்த உறவுகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன” என்றார்.

* டிரம்பை பார்த்து மோடிக்கு பயம் -ராகுல்

மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி தனது எக்ஸ் தள பதிவில், “ பிரதமர் மோடி டிரம்பை பார்த்து பயப்படுகிறார். இந்தியாவானது ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்காது என்று டிரம்ப் முடிவு செய்து அறிவிப்பதற்கு அனுமதிக்கிறார். பலமுறை அவமதிக்கப்பட்ட பின்னரும் பிரதமர் மோடி தொடர்ந்து வாழ்த்துச் செய்திகளை அனுப்பிக்கொண்டே இருக்கிறார். நிதியமைச்சரின் அமெரிக்க வருகையை பாதியில் ரத்து செய்தார்.

எகிப்தின் ஷாரம் எல் ஷேக்கில் நடந்த அதிபர் டிரம்ப் தலைமையில் காசா அமைதி மாநாட்டை பிரதமர் மோடி தவிர்த்து விட்டார். ஆபரேஷன் சிந்தூர் விவகாரத்தில் அவரை எதிர்க்கவில்லை” என்று தெரிவித்துள்ளார். இதேபோல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது பதிவில், “அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தான் இந்தியா ஆபரேஷன் சிந்தூரை நிறுத்தியதாக முதலில் அறிவித்தார்.

அதனை தொடர்ந்து அதிபர் டிரம்ப் 5 நாடுகளில் 51முறை இதனை வரிகள் மற்றும் வர்த்தகத்தை அழுத்த ஆயுதமாக பயன்படுத்தினார். இப்போது அதிபர் இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யாது என அறிவித்துள்ளார். பிரதமர் மோடி முக்கிய முடிவுகளை அமெரிக்காவிற்கு அவுட் சோர்ஸ் செய்ததாக தெரிகின்றது. 56 அங்கு மார்பு சுருங்கிவிட்டது என விமர்சித்துள்ளார்.

* தடை விதித்தால் உறுதியான எதிர் நடவடிக்கை- சீனா

சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் செய்தியாளர் சந்திப்பின்போது, “அமெரிக்காவின் அணுகுமுறையானது ஒருதலைப்பட்ச மிரட்டல் மற்றும் பொருளாதார வற்புறுத்தலுக்கு சமமாகும். இது சர்வதேச வர்த்தக விதிகளை கடுமையாக குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றது. உலகளாவிய தொழில்துறை மற்றும் விநியோக சங்கிலிகளின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை அச்சுறுத்துகின்றது. சீனாவின் நியாயமான உரிமைகள் மற்றும் நலன்கள் பாதிக்கப்பட்டால் நமது இறையாண்மை, வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு நலன்களை பாதுகாப்பதற்கு உறுதியான எதிர்நடவடிக்கைகளை எடுப்போம் “ என்றார்.

* நுகர்வோரின் நலன்களுக்கு முன்னுரிமை: ஒன்றிய அரசு விளக்கம்

அமெரிக்க அதிபர் டிரம்பின் கருத்துக்களுக்கு பின் பேசிய இந்திய வெளியுறவு துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால்,”நிலையற்ற எரிசக்தி சூழ்நிலையில் இந்திய நுகர்வோரின் நலன்களை பாதுகாப்பது ஒன்றிய அரசின் நிலையான முன்னுரிமையாகும். இந்தியாவில் இறக்குமதி கொள்கைகள் முற்றிலும் தேசிய நலன்களால் வழிநடத்தப்படுகின்றன. அமெரிக்கா உடனான எரிசக்தி உறவுகளை விரிவுபடுத்துவதையும் இந்தியா கவனித்து வருகின்றது.

நிலையான எரிசக்தி விலைகள் மற்றும் பாதுகாப்பான விநியோகங்களை உறுதி செய்வது எங்கள் எரிசக்தி கொள்கையின் இரட்டை இலக்குகளாகும். இதில் நமது எரிசக்தி ஆதாரங்களை விரிவுபடுத்துவதும், சந்தை நிலைமைகளுக்கு ஏற்றவாறு பன்முகப்படுத்துவதும் அடங்கும் “ என்றார். ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தப் போவதாக அதிபர் டிரம்ப்பிடம் பிரதமர் மோடி உறுதி அளித்தாரா? என்பது குறித்து வெளியுறவு துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் நேரடியாக மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.