புதுடெல்லி: இந்தியா மீது 50 சதவீத வரி விதித்த அமெரிக்காவின் நடவடிக்கையையும், அதை அதிகரிக்கும் என்ற அச்சுறுத்தலையும் சீனா முழுமையாக எதிர்ப்பதாக சீன தூதர் சூ பீஹோங் கூறினார். டெல்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இந்தியாவுக்கான சீன தூதர் சூ பீஹோங், ‘‘வரி மற்றும் வர்த்தக போர்கள் உலகளாவிய பொருளாதார மற்றும் வர்த்தக அமைப்பை சீர்குலைக்கின்றன. இந்தியா மீது அமெரிக்கா 50 சதவீதம் வரிகளை விதித்தது.
மேலும் வரிகளை அதிகரிப்பதாக அச்சுறுத்துகிறது. இதை சீனா முழுமையாக எதிர்க்கிறது. சீனாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டை ஒற்றுமை மற்றும் பலனளிக்கும் விளைவுகளை கொண்டதாக நடத்த இந்தியா உட்பட அனைத்து தரப்பினருடனும் இணைந்து பணியாற்ற சீனா தயாராக இருக்கிறது’’ என்றார். இந்தியாவுக்கு எதிராக அமெரிக்க அதிபர் டிரம்ப் பல்வேறு வர்த்தக நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், இந்தியா-சீனா இடையேயான உறவு சமீபகாலமாக நெருக்கமடைந்து வரும் நிலையில் சீன தூதர் இவ்வாறு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.