அமெரிக்காவில் முடங்கிய அரசு நிர்வாகம் கட்டாய பணி நிறுத்தத்தால் 1,000 விமானங்கள் ரத்தானது: நன்றி தெரிவிக்கும் தினத்தில் நிலைமை மேலும் மோசமாகும்
வாஷிங்டன்: அமெரிக்கா அதிபர் டிரம்பின் அதிரடி முடிவுகளால் உலக நாடுகள் மட்டுமின்றி அமெரிக்க மக்களும் கடுமையான பாதிப்புகளை சந்திக்கின்றனர். அமெரிக்காவை பொறுத்தவரை அரசின் செலவுகளுக்கான நிதியை விடுவிப்பதற்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற வேண்டும். இந்த நிதியாண்டிற்கான செலவு தீர்மானம் நிறைவேற்றுவதில் ஆளும் குடியரசு கட்சிக்கும், ஜனநாயக கட்சிக்கும் இடையே இன்னமும் ஒற்றுமை ஏற்படவில்லை. இதனால், நிதி மசோதா நிறைவேற்றப்படாமல் அரசு நிர்வாகம் கடந்த 38 நாட்களாக முடங்கி இருக்கிறது.
அரசு செலவு செய்வதற்கு பணம் விடுவிக்கப்படாமல் இருப்பதால் பல துறைகளில் அரசு ஊழியர்கள் சம்பளம் பெறாமல் வேலை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் பல துறைகளில் கட்டாய பணி நிறுத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கடந்த சனிக்கிழமை ஒரே நாளில் அமெரிக்கா முழுவதும் 1000க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. குறிப்பாக, லாஸ் ஏஞ்சல்ஸ், சிகாகோ, நியூயார்க், அட்லாண்டா, டென்வர் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட விமான நிலையங்களில் 10 சதவீத விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
கடந்த 2018ல் டிசம்பர் 22 முதல் ஜனவரி 25 வரை 35 நாட்கள் அரசு நிர்வாகம் முடங்கியதே சாதனையாக இருந்தது. தற்போதை அதை முறியடித்து 38 நாட்களாக அரசு நிர்வாகம் முடங்கியிருக்கிறது. இன்னும் எத்தனை நாள் இந்த முடக்கம் நீடிக்கும் என்பதும் முடியாத கதையாக இருக்கிறது. இதற்கிடையே வரும் 27ம் தேதி தேங்க்ஸ் கிவ்விங் டே எனும் நன்றி தெரிவிக்கும் தினம் அமெரிக்கா முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. அப்போது அமெரிக்கர்கள் பலரும் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு விழாவை கொண்டாட செல்வார்கள். இந்த நிலையில் அரசு நிர்வாகம் முடங்கியிருப்பதால் விமான பயணம் முதல் வீட்டு மளிகை பொருட்கள் வரை அனைத்தின் விலை அதிகரிக்கும். அதோடு விமானம் ரத்தாவது, பொருட்கள் பற்றாக்குறையும் ஏற்படும். இது நன்றி தெரிவிக்கும் தினத்தின் மகிழ்ச்சியை கெடுக்கக் கூடும் என்றும் அஞ்சப்படுகிறது. கடந்த 2018ல் 35 நாட்கள் ஏற்பட்ட முடக்கத்தால் அரசுக்கு ஜிடிபியில் 3 பில்லியன் டாலர் (ரூ.26 ஆயிரம் கோடி) இழப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

