வாஷிங்டன்: அமெரிக்காவில் யுபிஎஸ் சரக்கு விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விழுந்து நொறுங்கியதில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 11 பேர் காயமடைந்தனர். அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தில் உள்ள லூயிஸ்வில் முஹம்மது அலி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, ஹவாய் மாகாணத்தின் ஹொனலூலு நகருக்கு யுபிஎஸ் நிறுவனத்தின் சரக்கு விமானம் ஒன்று நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி மாலை 5.15 மணியளவில் புறப்பட்டது.
மெக்டொனால் டக்ளஸ் எம்.டி-11எஃப் ரக அந்த விமானத்தில் மூன்று விமான ஊழியர்கள் இருந்தனர். விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கட்டுப்பாட்டை இழந்து, விமான நிலையத்தின் அருகே இருந்த வாகன உதிரி பாகம் தயாரிக்கும் ஆலை உள்ளிட்டவை இருந்த பகுதியில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானம் தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 3 பேரும் உயிரிழந்தனர்.
மேலும் தரையில் நின்றிருந்த 11 பேர் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பயங்கர விபத்தைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு சுமார் 200க்கும் மேற்பட்ட அவசரக்கால மீட்புப் படையினர் விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். விபத்து காரணமாக லூயிஸ்வில் விமான நிலையம் இரவு முழுவதும் மூடப்பட்டது. பின்னர் நேற்று காலை மீண்டும் விமான சேவைகளை தொடங்கியது. மேலும் அந்த பகுதியில் பணியில் இருந்த சிலரை காணவில்லை என்றும் கூறப்படுகின்றது. தொடர்ந்து மீட்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
