சண்டிகர்: அமெரிக்காவில் இருந்து 33 ஆண்டுகளுக்கு பிறகு 73 வயது மூதாட்டி ஒருவர் கைவிலங்கிட்டு நாடு கடத்தப்பட்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சீக்கிய பெண் ஹர்ஜித் கவுர்(தற்போது 73 வயது). இவரது கணவர் இறந்து விட, இரண்டு மகன்களுடன் ஹர்ஜித் கவுர் பஞ்சாப்பில் வசித்து வந்தார். பின்னர் கடந்த 1992ம் ஆண்டு இரு மகன்களுடன் அமெரிக்கா சென்ற ஹர்ஜித் கவுர், அங்கு வடக்கு கலிபோர்னியா மாகாணத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்தார்.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவில் உள்ள வௌிநாட்டினருக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருவதால் அப்பாவி மக்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில், ஹர்ஜித் கவுர் உரிய ஆவணங்களின்றி, சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியதாக குடிவரவு அதிகாரிகள் குற்றம்சாட்டினர். இதுதொடர்பான விசாரணைக்காக கடந்த 8ம் தேதி சென்ற ஹர்ஜித் கவுரை கலிபோர்னியா குடியேற்ற அதிகாரிகள் கைது செய்து முகாமில் அடைத்து வைத்தனர்.
இந்நிலையில் ஹர்ஜித் கவுர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். இதுகுறித்து ஹர்ஜித் கவுர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “நான் ஆறு மாதத்துக்கு ஒருமுறை சான்பிரான்சிஸ்கோவில் உள்ள குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு சென்று என் வருகையை பதிவு செய்வேன். என்னிடம் பணி செய்வதற்கான உரிய ஆவணம் இருந்தது. ஆனால் திடீரென கடந்த 8ம் தேதிஎன்னை கைது செய்தனர். எந்த காரணமும் சொல்லாமல் கையில் கைவிலங்கிட்டு அழைத்துச் சென்றனர். என் குடும்ப உறுப்பினர்களிடம் விடை பெற கூட வாய்ப்பு தராமல் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பி விட்டனர். எனக்கு ஏற்பட்ட சோகம் யாருக்கும் வரக்கூடாது. அமெரிக்காவில் உள்ள என் குடும்பத்தினருடன் மீண்டும் சேர வேண்டும்” என கண்ணீர் மல்க கூறினார்.