Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அமெரிக்காவின் 50% வரி விதிப்பால் கிறிஸ்துமஸ் ஆர்டர்களுக்காக தயாரித்தவை திருப்பூரில் முடங்கிய ரூ.500 கோடி பின்னலாடைகள்: தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம்; ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

திருப்பூரில் பனியன் ஏற்றுமதி நிறுவனங்கள் ஆண்டுக்கு 45 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பனியன் ஆடைகளை அமெரிக்கா, ஐரோப்பா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. இதில், சுமார் 35%, ரூ.18,000 கோடி ஏற்றுமதி அமெரிக்காவிற்கு மட்டுமே அனுப்பப்படுகிறது. மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் அமெரிக்காவிற்கு விலை குறைவான ஆடைகள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதில், உற்பத்தியாளர்களுக்கான லாபமும் குறைந்த அளவே உள்ளது. அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்பதற்கு முன்பாக 16 சதவீதம் வரை வரி இருந்த நிலையில் அமெரிக்க அதிபராக அவர் பொறுப்பேற்ற பிறகு 25% கூடுதல் அபராத வரியை அறிவித்தார்.

இது இந்திய உற்பத்தியாளர்கள் மற்றும் அமெரிக்க வர்த்தகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இரு தரப்பும் பரஸ்பர வரி பகிர்வு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி ஒரு உடன்பாடு ஏற்படுத்தினர். ஆனால், யாரும் எதிர்பாராத நிலையில் சில நாட்களிலேயே மீண்டும் 25 சதவீத கூடுதல் வரி விதிப்பு கடந்த 27ம் தேதி முதல் அமலாகும் என தெரிவித்து 50 சதவீதம் வரி விதிப்பை டிரம்ப் அமல்படுத்தினார். இது இரு தரப்பினரிடமும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த வரி விதிப்பு காரணமாக இந்திய மதிப்பில் 100 ரூபாய் ஆடை163 முதல் 169 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்கு அமெரிக்க வர்த்தகர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

மேலும், விற்பனையின் போது இன்னும் உச்ச விலையை அடையும் என்பதால் அமெரிக்க வர்த்தகர்கள் கொடுத்திருந்த பனியன் ஆர்டர்களை பெறுவதில் தயக்கம் காட்டத் துவங்கினர். அதே நேரத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவின் போட்டி நாடுகளான வங்கதேசம், வியட்நாம், இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கான வரியை 20% வரை விதித்தார். இதனால், அமெரிக்க வர்த்தகர்கள் இந்தியாவுடன் வர்த்தகத்தை நிறுத்தி போட்டி நாடுகளுக்கு செல்ல ஆயத்தமாயினர்.

இந்த சூழ்நிலையில் இந்தியாவின் பேச்சுவார்த்தைக்கு உடன்பட போவதில்லை என அமெரிக்கா அறிவித்த நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக பெற்ற ஆர்டர்களை முடித்து தயார் நிலையில் வைத்திருந்தும் அதனை வர்த்தகர்கள் பெறாததால் திருப்பூர் உற்பத்தியாளர்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர். ஒரு சில உற்பத்தியாளர்கள் மற்றும் அமெரிக்க வர்த்தகர்கள் பரஸ்பர வரி பகிர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தி கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான ஆர்டர்களை மட்டும் பெற துவங்கி உள்ளனர். ஆனால், அடுத்த கட்ட ஆர்டர்கள் குறித்து எந்த அறிவிப்பும் இல்லாமல் உள்ளது.

இதுகுறித்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் உற்பத்தியாளர் முகமது யூசுப் கூறியதாவது: அமெரிக்காவிற்கு தொடர்ச்சியாக பின்னலாடைகள் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்து வருகின்றோம். அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றவுடன் வரி சீரமைப்பில் பல்வேறு அதிரடி மாற்றங்களை மேற்கொண்டார். யாரும் எதிர்பாராத விதமாக 50% அபராத வரி விதிப்பை அறிவித்தார். இந்த அறிவிப்பால் திருப்பூர் உற்பத்தியாளர்கள் மட்டுமல்லாது அமெரிக்க வர்த்தகர்களிடமும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இதனால், தற்போது ஏற்கனவே பெற்ற ஆர்டர்களுக்கு 25 சதவீத பரஸ்பர வரி பகிர்வுடன் ஏற்றுமதி செய்கின்றோம்.

கிறிஸ்துமஸ் ஆர்டர்கள் கடந்த 90 நாட்களுக்கு முன்பாக பெற்று உற்பத்தி செய்யப்பட்ட நிலையில் அமெரிக்க அதிபரின் இந்த திடீர் முடிவால் நஷ்டத்தை சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவிற்கான உற்பத்தி செய்யப்பட்ட ஆடைகளை வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய முடியாது. இதன் காரணமாக திருப்பூரைச் சேர்ந்த ஒரு சில உற்பத்தியாளர்கள் 10 சதவீதம் வரை நஷ்டத்தை ஏற்றுக்கொண்டு 25 சதவீதம் பரஸ்பர வரி பகிர்வுடன் கிறிஸ்துமஸ் ஆர்டர்களை அனுப்பி வருகிறோம். இருப்பினும், பெரும்பாலான நிறுவனங்களில் ஆர்டர்கள் கொடுத்த வர்த்தகர்கள் ஆர்டர்களை திரும்ப பெறுவது குறித்து இன்னும் அறிவிப்பு வழங்காமல் உள்ளனர்.

கிறிஸ்துமஸ் ஆர்டர்களை அனுப்பும் நிறுவனங்கள் கூட அடுத்த ஆர்டர்கள் குறித்த அறிவிப்பு கிடைக்க பெறாமல் உள்ளனர். இதனால், தங்கள் தொழிலாளர்களுக்கு தொடர்ந்து வேலை அளிக்க முடியுமா? என்பது தெரியாமல் தவித்து வருகிறோம். ஒன்றிய அரசு உடனடியாக இதன் மீது கவனம் செலுத்தி தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பது மட்டுமல்லாது உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கான சலுகைகளை அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பனியன் நிறுவன தொழிலாளி வனிதா கூறுகையில்,“கொரோனா ஊரடங்கிற்கு பிறகு 2 ஆண்டுகள் கழித்து கடந்த ஓராண்டு காலமாக நல்ல முறையில் வேலை செய்து கொண்டிருக்கிறோம். திடீரென அமெரிக்காவில் வரிவிதிப்பு அதிகரிப்பு என கூறி வருகிறார்கள். இதனால் திருப்பூரில் பனியன் தொழில் பாதிக்கப்படும் என பல்வேறு தரப்பினரும் தெரிவிக்கின்றனர். எங்களுக்கு வேலை நீடிக்குமா? என்ற கவலை ஏற்பட்டுள்ளது. மீண்டும் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டால் பொருளாதார ரீதியில் திருப்பூரில் உள்ள தொழிலாளர்களின் குடும்பங்கள் பெரும் துயரங்களுக்கு உள்ளாகும். எனவே, வேலை இழக்காத வகையில் உடனடி நடவடிக்கையை ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டும்” என்றார்.

* 35,00,000 ஆடைகள் தேக்கம்

அமெரிக்காவிற்கு அனுப்பக்கூடிய கிறிஸ்துமஸ் ஆர்டர்களுக்காக மட்டும் சுமார் 35 லட்சம் ஆடைகள் தயார் செய்யப்பட்டுள்ளது. ஒரு சில நிறுவனங்கள் நஷ்டத்தை ஏற்றுக் கொண்டு ஆடைகளை அனுப்பினாலும் கூட ஒரு சில நிறுவனங்களில் ஆர்டர்கள் முழுவதுமாக தேக்கமடைந்தது. உற்பத்தியாளர்கள் ஒரு சில சதவீதங்களை குறைத்து ஏற்றுமதி செய்ய தயார் நிலையில் இருந்தாலும் அமெரிக்க வர்த்தகர்கள் பொதுமக்களின் வாங்கும் திறனை கணக்கில் கொண்டு அதனை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். இதனால், திருப்பூரில் மட்டும் சுமார் 35 லட்சம் ஆடைகள் தேக்கமடைந்திருப்பதன் மூலம் ரூ.500 கோடி வரை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

* ரூ.4000 கோடி வர்த்தக விசாரணை?

கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்க அதிபர் டிரம்ப் வரி விதிப்பு தொடர்பாக அறிவிப்புகளை வெளியிட்டார். தொடர்ந்து நேற்று முன்தினம் 50 சதவீத வரி விதிப்பை அமல்படுத்தியதன் காரணமாக கடந்த இரண்டு மாதத்தில் 3,000 முதல் 4000 கோடி ரூபாய் வரையிலான வர்த்தக விசாரணை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விதிக்கப்பட்ட வரியிலிருந்து 50 சதவீதம் உயர்த்தப்பட்டு 63 முதல் 69 சதவீதம் வரை வரி செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், புதிய வர்த்தக விசாரணை தற்போது அமெரிக்க வர்த்தகர்களிடமிருந்து நடைபெறவில்லை என திருப்பூர் உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். அதே நேரத்தில் அமெரிக்காவை தவிர்த்து அமெரிக்காவிற்கு ஈடான மற்ற சந்தையை கையகப்படுத்துவது என்பது தற்போதைக்கு சாத்தியமில்லை எனவும் தெரிவிக்கின்றனர்.

* உற்பத்தியாளர்கள் கோரிக்கை

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கே.எம்.சுப்ரமணியன் கூறுகையில்,“அமெரிக்க அரசின் வரி விதிப்பு நடவடிக்கையிலிருந்து மீண்டு வர திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு ஒன்றிய அரசு பல்வேறு சிறப்பு சலுகைகளை உற்பத்தியாளர்களுக்கு அளித்திட வேண்டும். ஏற்றுமதியாளர்களுக்கான சிறப்பு அவசர கடன் வசதியை தவிர, வங்கிக் கடன்களின் அசல் தொகையை திருப்பிச் செலுத்துவதற்கு உற்பத்தியாளர்களுக்கு 2 ஆண்டு கால அவகாசம் வழங்க வேண்டும். டியூட்டி டிராபேக் சதவீதத்தை அதிகரிக்க வேண்டும்” என்றார்.

* திருப்பூரில் போராட்ட அறிவிப்பு

அமெரிக்காவின் புதிய வரி விதிப்பால் தமிழகத்தின் ஜவுளி, ஆயத்த ஆடைகள், ஆபரணங்கள் மற்றும் தோல் பொருட்கள், மின்சார இயந்திர சாதனங்கள் உள்ளிட்ட உற்பத்தி தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த அடாவடி நடவடிக்கையை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் விடுதலை கட்சி சார்பில் தொழில் நகரங்களில் வரும் 5ம் தேதி போராட்ட அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக பெரும் பாதிப்பை சந்திக்கும் திருப்பூரிலும் வரும் 5ம் தேதி அமெரிக்க அரசின் வரி விதிப்பிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில், பல்வேறு தொழில்துறையினரும் பங்கெடுக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

* மரக்காணத்தில் ரூ.1,000 கோடி இறால் ஏற்றுமதி பாதிப்பு

தமிழகத்தின் விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கடற்கரையோரம் சுமார் 80க்கும் மேற்பட்ட இறால் குஞ்சு பொறிப்பக தொழிற்சாலைகள் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் இறால் குஞ்சுகள் தமிழகத்துக்கு மட்டுமல்லாமல் ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்கம், ராஜஸ்தான், அரியானா போன்ற வெளி மாவட்டங்களுக்கும் ஏற்றுமதி செய்கின்றனர். இந்த இறால் குஞ்சுகளை அந்தப் பகுதியிலுள்ள விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் தங்களது நிலங்களில் இறால் பண்ணைகள் அமைத்து வளர்த்து வருகின்றனர்.

இவ்வாறு பண்ணைகளில் பராமரிக்கப்படும் இறால் குஞ்சுகள் 3 மாதம் முதல் 4 மாதத்திற்குள் 50 கிராம் அளவிற்கு வளர்ச்சியடைந்து விடுகிறது. பின்னர் இந்த இறால்களை வியாபாரிகள் மொத்தமாக வாங்கிச் செல்வதோடு, முறையாக பதப்படுத்தி அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கின்றனர். குறிப்பாக அமெரிக்காவிற்கு மட்டும் 60% ஏற்றுமதி செய்யப்படுகிறது. இறால் ஏற்றுமதி மூலம் இந்தியாவிற்கு ஆண்டுதோறும் பல ஆயிரம் கோடி அன்னிய செலாவணி கிடைக்கிறது. இந்த தொழிலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில்இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா கூடுதலாக 50% வரி அமலுக்கு வந்துள்ளது. இதனால் இறால் தொழிலில் ஏற்றுமதி செய்ய முடியாமல் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்த திடீர் வரி விதிப்பால் தற்போது மட்டும் விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இறால்களை ஏற்றுமதி செய்ய முடியாமல் சுமார் ரூ.1,000 கோடிக்கு மேல் தேக்கம் அடைந்துள்ளதாக அதன் உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர். இதே நிலை தொடர்ந்தால் இத்தொழிலில் அதிக அளவில் நஷ்டம் ஏற்பட்டு ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் வேலை இழக்கும் நிலை ஏற்படும் என கவலை தெரிவிக்கின்றனர்.

மேலும் இந்த இறால் உற்பத்தி தொழில் என்பது ஒரு சங்கிலி தொடர் போன்ற தொழிலாகும். இந்த தொழிலை மேம்படுத்த அமெரிக்காவை மட்டும் நம்பி இருக்கக் கூடாது. மேலும் பல்வேறு நாடுகளுக்கு இறால்களை ஏற்றுமதி செய்ய ஒன்றிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோல் நம் நாட்டிலேயே இறால்களை அதிகளவில் விற்பனை செய்யும் வகையில் உள்நாட்டு சந்தைகளை அதிகப்படுத்த வேண்டும். குறைந்த விலையில் கிடைக்கும் இறால்களை அனைத்து பொதுமக்களும் வாங்கும் வகையில் அரசும் போதிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதுபோல ஆந்திரா, ஒடிசாவில் உள்ளதுபோல் இறால் தொழிற்சாலை, பண்ணைகளுக்கு மின்சார மானியம் வழங்க வேண்டும். இறால்களுக்கான 5% ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட இறால்களுக்கான 12% ஜிஎஸ்டி வரியை 5 சதவீதமாக குறைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள உற்பத்தியாளர்கள், இதுபோன்ற கோரிக்கைகளை நிறைவேற்றித் தந்தால் மட்டுமே இறால் தொழிலை தொடர்ந்து நடத்த முடியும்,. இல்லையென்றால் இத்தொழில் படிப்படியாக நலிவடைந்து, இதனை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் வேலை இழக்கும் நிலை உருவாகலாம் என எச்சரிக்கின்றனர்.

* தூத்துக்குடி நிறுவனங்கள் 50% உற்பத்தி குறைப்பு

தமிழ்நாட்டில் உள்ள 25 கடல் உணவு ஏற்றுமதி நிறுவனங்களில் 15 நிறுவனங்கள் தூத்துக்குடியில் இயங்குகின்றன. இந்நிறுவனங்களில் இருந்து இறால், கணவாய், ஆக்டோபஸ், மீன் மற்றும் கடல் நண்டுகள் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பாவுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு மட்டும் இந்தியாவில் இருந்து ரூ.60 ஆயிரம் கோடி மதிப்பிலான மீன், இறால் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதில் இறாலின் பங்கு 40%. தற்போது அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பால் கடல் உணவு ஏற்றுமதி ரூ.36 ஆயிரம் கோடியாக சரியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து மட்டும் சுமார் ரூ.3 ஆயிரம் கோடி அளவுக்கு அமெரிக்காவுக்கு கடல் உணவுகள் ஏற்றுமதியாகி இருந்தது. தற்போது கூடுதல் வரி விதிப்பால் இந்த ஏற்றுமதி பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் கடல் உணவு நிறுவனங்கள் உற்பத்தியை 50% குறைத்துள்ளன.