அமெரிக்காவின் அலாஸ்கா மாகாண கடற்கரையில் 7.3 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
வாஷிங்டன் : அமெரிக்காவின் அலாஸ்கா மாகாண கடற்கரையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவான இந்த நிலநடுக்கம், அலாஸ்கா மாகாணத்தின் மையப்பகுதி தீவு நகரமான சாண்ட் பாயிண்டிற்கு தெற்கே சுமார் 87 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டுள்ளது.20 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் அச்சம் அடைந்த மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்திற்குப் பிறகு தெற்கு அலாஸ்கா மற்றும் அலாஸ்கா தீப கற்பத்திற்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது. சாண்ட் பாயிண்ட் கடற்கரை பகுதிகளில் அதிகபட்சமாக 6.1 செ.மீ. அளவுக்கு சுனாமி அலைகள் எழுந்தது. பின்னர் 2 மணி நேரங்களுக்குப் பிறகு சுனாமி எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டது. மேலும் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து, சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் சேதங்கள், பொருட் சேதங்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. பசபிக் கடல் பகுதியில் அமைந்துள்ள அலாஸ்கா மாகாணம் நிலநடுக்கங்கள் அடிக்கடி ஏற்படக்கூடிய 'ரிங்க் ஆப் பயர்' என்ற இடத்தில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.