Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அமெரிக்காவில் பல்கலை. நிகழ்ச்சியில் பயங்கரம்: அதிபர் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளர் சார்லி கிர்க் சுட்டுக்கொலை!

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் ஆதரவாளரான சார்லி கிர்க், பல்கலைக்கழக நிகழ்ச்சியின் போது சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளராக அறியப்பட்ட சார்லி கிர்க் (வயது 31). சார்லி கிர்க்கிற்கு ஒரு மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இவர் இளம் வாக்காளர்களை குடியரசுக் கட்சி ஆதரவாளர்களாக மாற்றுவதில் பெரும் பங்கு வகித்தார். இவர் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து அங்குள்ள மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார்.

அதன்படி உட்டா மாகாணத்தில் உள்ள கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சார்லி கிர்க் கலந்து கொண்டு பேசினார். அப்போது கூட்டத்தில் இருந்து ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் கழுத்தில் குண்டு பாய்ந்து சார்லி கிர்க் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த படுகொலை சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரை சுட்டுக் கொன்றவர் யார்? எதற்காக சுட்டார் என்பது குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. மேலும், ஸ்வாட் பிரிவு காவல் துறையினர் சுட்டுக் கொன்றவர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இந்தச் சம்பவத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் தன்னுடைய ட்ரூத் சோஷியல் பக்கத்தில் உறுதிபடுத்தியுள்ளார். சார்லி கிர்க்கின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள ஜனாதிபதி டிரம்ப், அவரது படுகொலை சம்பவம் தேசிய துக்கமாக அனுசரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டிரம்ப் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்; அமெரிக்க இளைஞர்களின் இதயத்தை சார்லி கிர்க் போல் வேறு யாரும் புரிந்து கொண்டதில்லை. அவர் மீது அனைவரும் அன்பு வைத்திருந்தனர். இன்று அவர் நம்முடன் இல்லை. அவரது குடும்பத்தினருக்கு நானும் எனது மனைவி மெலனியாவும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். அமெரிக்காவின் மாபெரும் தியாகி சார்லி கிர்க்கை கவுரவிக்கும் விதமாக, அவரது படுகொலையை தேசிய துக்கமாக அனுசரித்து வரும் ஞாயிறு மாலை 6 மணி வரை நாடு முழுவதும் அமெரிக்க கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்க விட உத்தரவிட்டுள்ளேன் என்று பதிவிட்டுள்ளார்.