அமெரிக்காவில் உயர்கல்வி பயில செல்லும் மாணவர்கள் எண்ணிக்கை 44 சதவீதமாக குறைந்துள்ளது. அமெரிக்கா சென்று படிக்க வேண்டும் என்பது பல இந்திய மாணவர்களின் கனவாக இருந்து வருகிறது. அந்த வகையில், இந்திய மற்றும் சீன மாணவர்கள்தான் அமெரிக்காவின் சர்வதேச மாணவர் எண்ணிக்கையில் பெரும்பங்கு வகிக்கின்றனர். அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டு மாணவர்களில், மூன்றில் ஒருவர் இந்தியர், ஐந்தில் ஒருவர் சீனர் உள்ளனர்.
சமீபத்தில் 19 நாடுகள் மீது டிரம்ப் நிர்வாகம் விதித்த பயணத் தடையும், வெளிநாட்டு மாணவர்களிடையே ஒருவிதமான பயத்தையும், நிச்சயமற்ற தன்மையையும் உருவாக்கியது. மாணவர் விசா விண்ணப்பங்களை மிகக் கடுமையாகச் சரிபார்ப்பது. அவர்களின் சமூக ஊடகப் பதிவுகளைக் கூட தீவிரமாகக் கண்காணிப்பது, விசா வழங்கும் முறையில் ஏற்படும் தாமதம் உள்ளிட்டவை அமெரிக்காவுக்குப் படிக்கச் செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையை வரலாறு காணாத அளவுக்குச் சரித்தது.
சமீபத்தில் வெளியான ஒரு புள்ளிவிவரத்தில், கொரோனா காலகட்டத்துக்கு பிறகு உயர்கல்வி பயில அமெரிக்கா செல்வோர் எண்ணிக்கை அதிக அளவில் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. 2021ல் 56,000 மாணவர்கள் உயர்கல்வி படிப்பதற்காக அமெரிக்கா சென்றனர்; 2022ல் 80,486 பேர் சென்றிருந்தனர். 2023ல் 93,833 மாணவர்கள் அமெரிக்கா சென்ற நிலையில் 2024ல் 74,825ஆக குறைந்துள்ளது. இவ்வாண்டு 41,540 மாணவர்கள் மட்டுமே உயர்கல்வி பயில அமெரிக்கா சென்றுள்ளனர் என குறிப்பிட்டுள்ளது.