நியூயார்க்: ஆந்திராவைச் சேர்ந்த சசிகலா நர்ரா( 38) அவரது மகன் அனிஷ்( 6) மற்றும் கணவர் ஹனு நர்ராவுடன் அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் வசித்து வந்தார்.கடந்த 2017ல், சசிகலாவும், அவரது மகனும் கத்தியால் குத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். குற்றம் நடந்த இடத்திலிருந்து கிடைத்த ரத்த மாதிரிகளை தடயவியல் நிபுணர்கள் சேகரித்தனர். அதில் ஒரு ரத்த துளி, கொலையாளியின் ரத்த மாதிரி என தெரியவந்தது.இதைத் தொடர்ந்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தியபோது, சசிகலாவின் கணவருடன் பணியாற்றிய நசீர் ஹமீத்(38) மீது சந்தேகம் எழுந்தது. கொலை நடந்த ஆறு மாதத்தில் அவர் இந்தியா திரும்பியதும், சந்தேகத்தை அதிகரித்தது.
இதையடுத்து, மரபணு சோதனை செய்வதற்காக மாதிரிகளை தரும்படி அவரிடம் அமெரிக்க விசாரணை அமைப்பு கேட்டது. ஆனால் அவர் மறுத்துவிட்டார்.அமெரிக்காவில் நசீர் பணியாற்றிய, நிறுவனத்தில் அவர் பயன்படுத்திய லேப்டாப் பெறப் பட்டது. அதில் இருந்து கைரேகைகளை பரிசோதித்தபோது, ரத்த மாதிரியுடன் ஒத்துப் போனது. இந்நிலையில் நசீரை பற்றி தகவல் அளித்தால் ரூ.45 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என்று எப்பிஐ அறிவித்துள்ளது.

