மும்பை : அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இந்தியா - அமெரிக்க இடையேயான வர்த்தக ஒப்பந்தம் இன்னும் இறுதி செய்யப்படாமல், தொடர் பேச்சுவார்த்தையில் இருக்கும் நிலையில், ரூபாயின் மதிப்பு சரிவைக் கண்டுள்ளது. உலக சந்தையில் நிலையற்ற தன்மையும் ரூபாய் மதிப்பு சரிவுக்கு காரணமாக உள்ளன. பெரிய நாடுகளின் கரன்சிகளுக்கு எதிராக டாலர் மதிப்பு உயர்ந்து வருவதாலும் இந்திய ரூபாய் மதிப்பு சரிவை கண்டுள்ளது.
இதனிடையே வெளிநாட்டுப் பங்கு முதலீட்டாளர்கள் தொடர்ந்து பங்குகளை விற்பது மற்றும் அந்நிய செலாவணி சந்தையில் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆரம்பகால ஆதரவின்மை உள்ளிட்டவை ரூபாய் மதிப்பின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகின்றன. அமெரிக்க டாலருக்கான தேவை அதிகரித்ததும் இதற்கு காரணம் என்று இந்திய ரிசர்வ் வங்கி ஏற்கெனவே சுட்டிக்காட்டி உள்ளது.
இதனிடையே நேற்றைய இன்ட்ராடே வர்த்தகத்தில் ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத வகையில் ரூ. 90-ஐ எட்டியது. பின்னர் டாலருக்கு நிகராக 42 காசுகள் குறைந்து ரூ.89.95 ஆக நிலைபெற்றது. இந்த நிலையில், இன்று காலை டாலருக்கு இணையான இந்திய ரூபாய் மதிப்பு மேலும் சரிந்து ரூ. 90.15 ஆக உள்ளது. வரலாற்றில் முதல்முறையாக டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ. 90-ஐ கடந்துள்ளது.

