Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வெளிநாட்டு நிறுவனங்களின் சதியால் அமெரிக்காவில் மாட்டிறைச்சி விலை உயர்வு: அதிபர் டிரம்ப் கடும் ஆத்திரம்

வாஷிங்டன்: அமெரிக்காவில் மாட்டிறைச்சி விலை உயர்வுக்கு வெளிநாட்டு நிறுவனங்களே காரணம் என குற்றம்சாட்டியுள்ள அதிபர் டிரம்ப், இதுகுறித்து விசாரிக்க நீதித்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவில் மாட்டிறைச்சி விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. வறட்சி, கால்நடைகளின் எண்ணிக்கை குறைவு, பிரேசில் போன்ற நாடுகளிலிருந்து மாட்டிறைச்சி இறக்குமதிக்கு அதிபர் டிரம்ப் விதித்த வரிகள் ஆகியவை இதற்கு காரணமாக கூறப்பட்டாலும், இறைச்சி பதப்படுத்தும் சந்தையில் சில நிறுவனங்களின் ஆதிக்கமே முக்கிய காரணம் என நீண்டகாலமாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

இந்த நிலையில், சமீபத்தில் நடந்த முக்கிய தேர்தல்களில் ஆளும் குடியரசுக் கட்சி தோல்வியைச் சந்தித்தது. இந்தத் தேர்தல்களில், மக்களின் அன்றாட வாழ்க்கைச் செலவு உயர்வை ஜனநாயகக் கட்சி பிரதானமாக முன்வைத்தது. இதனையடுத்து, அதிபர் டிரம்ப் இறைச்சி நிறுவனங்கள் மீது தனது கவனத்தைத் திருப்பியுள்ளார். இதுகுறித்து தனது சமூக ஊடகப் பதிவில் அவர், ‘சட்டவிரோத கூட்டுச்சதி, விலை நிர்ணயம் மற்றும் விலையை கையாளுதல் ஆகியவற்றின் மூலம் மாட்டிறைச்சி விலையை உயர்த்தும் இறைச்சி நிறுவனங்கள் மீது உடனடியாக விசாரணையைத் தொடங்க நீதித்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். பெரும்பாலும் வெளிநாட்டுக்குச் சொந்தமான இறைச்சி நிறுவனங்கள் விலைகளை செயற்கையாக உயர்த்தி, நாட்டின் உணவுப் பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிக்கின்றன. அவர்களிடமிருந்து அமெரிக்க பண்ணையாளர்களை பாதுகாப்போம்’ என்று கடுமையாகக் குறிப்பிட்டுள்ளார்.