தொழிலாளர் சட்டத்தில் திருத்தம்; உ.பி தொழிற்சாலைகளில் 12 மணி நேர வேலை: ஜனாதிபதி ஒப்புதலுடன் புதிய சட்டம் அமல்
லக்னோ: உத்தரப் பிரதேச தொழிற்சாலைகளில் தினசரி வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தும் சட்டத் திருத்தம் குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் அமலுக்கு வந்துள்ளது. உத்தரப் பிரதேச தொழிற்சாலைகள் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்திற்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து, இந்த புதிய சட்டத் திருத்தம் நேற்று (நவ. 4) முதல் மாநிலம் முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. இந்த சட்டத்தின்படி, மாநில அரசுக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, தொழிற்சாலைகளில் தொழிலாளர்களின் தினசரி வேலை நேரத்தை 12 மணி நேரம் வரை நீட்டிக்க முடியும்.
இருப்பினும், ஒரு வாரத்திற்கான மொத்த வேலை நேரம் 48 மணி நேரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும், நிர்ணயிக்கப்பட்ட வேலை நேரத்திற்கு அதிகமாகப் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு, வழக்கமான ஊதியத்தை விட இரண்டு மடங்கு கூடுதல் ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அத்துடன், பெண்களின் ஒப்புதலுடன் அவர்களை இரவுப் பணிகளில் ஈடுபடுத்தவும் இந்த சட்டம் அனுமதிக்கிறது. அவ்வாறு இரவுப் பணியில் ஈடுபடும் பெண் ஊழியர்களுக்குப் பாதுகாப்பான போக்குவரத்து மற்றும் உரிய பாதுகாப்பு வசதிகளை உறுதி செய்ய வேண்டும் என்றும் இந்த சட்டத் திருத்தம் அறிவுறுத்துகிறது.
இந்த புதிய மாற்றங்கள் குறித்து மாநில தொழிலாளர் நலத்துறை முதன்மைச் செயலாளர் அதுல் வஸ்தவா கூறும்போது, ‘இந்த சீர்திருத்தங்கள் மாநிலத்தின் தொழில் போட்டித் திறனை மேம்படுத்தும். உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும். உத்தரப் பிரதேசத்தை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றும் இலக்கை அடைய இச்சட்டம் பெரிதும் உதவும். இதன் மூலம், தொழிற்சாலைகள் வாரத்திற்கு நான்கு நாட்கள் வேலை மற்றும் மூன்று நாட்கள் விடுமுறை என்ற பணி முறையையும் பின்பற்றலாம். அதேசமயம், தொழிலாளர்கள் சுரண்டப்படுவதைத் தடுக்க கடுமையான பாதுகாப்பு அம்சங்கள் உறுதிப்படுத்தப்படும்’ என்று குறிப்பிட்டார். சர்வதேச தொழிலாளர் அமைப்பின் வழிகாட்டுதல்களுக்கு இணங்க வாராந்திர வேலை நேர வரம்புகள் பாதுகாக்கப்படுவதையும் இந்தச் சட்டம் உறுதி செய்கிறது.
