ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு மிரட்டல்; எடப்பாடி பழனிச்சாமி அநாகரிகமான செயலை நிறுத்திக் கொள்ள வேண்டும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
சென்னை: அவசரகால 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களை எடப்பாடி பழனிச்சாமி மிரட்டி உள்ளார். இதுபோன்ற அநாகரிகமான செயலை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதிக்கு நேற்று சென்று இருந்தார். அப்போது அணைக்கட்டு எம்.ஜி.ஆர். சிலை அருகே மக்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசத் தொடங்கிய போது மக்கள் கூட்டத்தின் நடுவே 108 ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது.
இதை பார்த்து, கோபமடைந்த அவர், தி.மு.க. அரசு வேண்டும் என்றே ஒவ்வொரு கூட்டத்திலும் இது போன்ற நோயாளி இல்லாத ஆம்புலன்ஸ்களை விட்டு இடையூறு செய்கின்றனர். மக்களுக்கு ஏதாவது ஏற்பட்டால் யார் பொறுப்பு?. இதுதான் தி.மு.க.வின் கேவலமான செயலாகும். இந்த ஆம்புலன்சில் நோயாளி இல்லை. நான் பேசிய 30 கூட்டங்களிலும் ஆம்புலன்ஸ்களை இடையூறாக விட்டு உள்ளனர். இதன் மூலம் எச்சரிக்கை விடுக்கிறேன். அடுத்த கூட்டத்தில் ஆம்புலன்ஸ் வந்தால் அந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அதில் நோயாளியாக மருத்துவமனைக்கு செல்வார். இதுகுறித்து காவல் துறையில் நிர்வாகிகள் புகார் அளிக்க வேண்டும் என்றார். இதனால் கூட்டத்தில் சலசலப்பும், பரபரப்பும் ஏற்பட்டது. இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி பேச்சுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி தந்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்று வரும் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆய்வு செய்த பிறகு நிருபர்களிடம் கூறியதாவது: எடப்பாடி பழனிச்சாமி ஆம்புலன்ஸ் எங்க போனாலும் வருகிறது என்று கூறுகிறார். அவருக்கு ஆதரவு திரட்ட பிரதான சாலையில் எடப்பாடி பழனிச்சாமி செல்கிறார். 108 ஆம்புலன்ஸ் 1330 தமிழ்நாடு முழுவதும் இயங்கி கொண்டு உள்ளது. விபத்து ஏற்படும் எந்த பகுதியாக இருந்தாலும் உயிர் காக்கு ஆம்புலன்ஸ் விரைந்து சென்று உயிரைக் காக்க வேண்டும் உயிர் காக்கும் சேவையாக ஆம்புலன்ஸ் சேவை நடைபெற்று வருகிறது. இவர் ஆம்புலன்ஸ் வரும் வழியில் கூட்டத்தை போட்டுவிட்டு நான் வரும் வழியில் ஆம்புலன்ஸ் வருகிறது என்று கூறுகிறார்.
இது ‘‘அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்” என்று பழமொழி கூறுவார்கள் அது போல எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆம்புலன்ஸ்-ஐ பார்த்தால் ஏதோ ஒன்று தெரிகிறது போல? ஆம்புலன்ஸ் எண் மற்றும் உள்ளே இருக்கும் நபர்களின் விவரங்களை சேகரித்து வைத்துகொள்ளுகள் என அவர் பேசுவது மருத்துவத்துறையில் பணியாற்றுபவர்களுக்கு விடுக்கும் மிரட்டல் தொனி. முன்னாள் முதல்வர் இது போன்று பேசுவது அநாகரிகமான செயல். இது போன்ற பேச்சை இதோடு எடப்பாடி பழனிச்சாமி நிறுத்திக் கொள்ள வேண்டும். 108 ஆம்புலன்ஸ் சேவை போன்ற சிறப்பான மருத்துவ சேவை இந்தியாவில் வேறு எங்கும் இல்லை என அனைவரும் பாராட்டி வருகிறார்கள். அப்படிப்பட்ட தமிழக அரசின் மருத்துவ சேவையை குறை கூறி பேசுவது அவருக்கு மக்கள் எதிர்ப்பை இன்னும் அதிகரிக்கும் அதுமட்டுமின்றி அவரது செயல் தனது தரத்தை குறைத்துக் கொள்ளும் வகையில் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.