ஆம்புலன்ஸ் ஊழியரை எடப்பாடி மிரட்டிய விவகாரம் பொதுக்கூட்டம், போராட்டத்திற்கு டிஜிபி வழிகாட்டுதலின்படி அனுமதி: ஐகோர்ட் கிளை உத்தரவு
மதுரை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருச்சி துறையூரில் பிரசாரம் செய்த போது ஆம்புலன்ஸை மறித்து டிரைவர் மற்றும் உதவியாளரை அதிமுகவினர் தாக்கினர். இந்நிலையில், மதுரையை சேர்ந்த 108 ஆம்புலன்ஸ் டிரைவர் இருளாண்டி, 108 ஆம்புலன்ஸ் பைலட்கள் மற்றும் அவசர மருத்துவ தொழில்நுட்ப ஊழியர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. டிஜிபி தரப்பில் தேவையான வழிகாட்டுதல்கள் போலீஸ் கமிஷனர்கள் மற்றும் எஸ்பிக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என கூறப்பட்டது. மனுதாரர் தரப்பில், டிஜிபி தரப்பில் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்கள் திருப்திகரமாக உள்ளது என கூறப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதிகள், ஆர்ப்பாட்டம், போராட்டம் மற்றும் பொதுக்கூட்டங்கள் போன்றவற்றிற்கு அனுமதி வழங்கும்போது டிஜிபியின் வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்ற வேண்டுமென உத்தரவிட்டு, மனு மீதான விசாரணையை முடித்து வைத்தனர்.