ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனம் மீது தாக்குதல் நடத்தினால் 10 ஆண்டு சிறை: மக்கள் நல்வாழ்வுத் துறை எச்சரிக்கை
சென்னை: ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனம் மீது தாக்குதல் நடத்தினால் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தனி நபரோ அல்லது கூட்டமாகவோ தாக்குதல் நடத்தினால் 3 ஆண்டு முதல் 10 ஆண்டுகள் வரை சிறைதண்டனை விதிக்கப்படும். ஆம்புலன்ஸ் ஊழியர்களை தாக்குவோர் மீது ஜாமினில் வெளியே வராத பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து கைது நடவடிக்கை எடுக்கப்படும்
108 ஆம்புலன்ஸ் நோயாளிகளை அழைக்கச் செல்லும்போது சைரன் சப்தத்துடனே செல்லும்; அதனால் வெறும் ஆம்புலன்ஸ் செல்கின்றது என்று நினைக்க வேண்டாம். அழைப்புகள் ரெக்கார்ட் செய்யப்பட்டு முறையான விசாரணைக்குப் பிறகே ஆம்புலன்ஸ் நோயாளிகளை அழைக்கச் செல்கின்றது
108 ஆம்புலன்ஸ் மற்றும் பணியாளர்களை தாக்கினால் வன்முறை தடுப்பு மற்றும் உடைமைகள் சேதார தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். தாக்கும் நபர்கள் மீது மருத்துவ பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 3 முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது.
துறையூரில் அதிமுக பொதுக்கூட்டத்தின்போது 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக 108 ஆம்புலன்ஸ் நிர்வாகம் சுற்றறிக்கை. ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை தாக்கினால் எடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகள் குறித்த பதாகைகளை 108 ஆம்புலன்ஸ் கதவுகளில் வலது புறத்தில் ஒட்டவும் அறிவுறுத்தபட்டுள்ளது.