ஆம்புலன்ஸ் ஊழியர்களை எடப்பாடி மிரட்டிய விவகாரம் போக்குவரத்து மிகுந்த சாலைகளில் பிரசாரத்துக்கு அனுமதி கூடாது: ஐகோர்ட் மதுரை கிளையில் டிஜிபி அறிக்கை தாக்கல்
மதுரை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் 18ம் தேதி வேலூர் மாவட்டம், அணைக்கட்டு மற்றும் கடந்த 24ம் தேதி திருச்சி துறையூரில் பிரசாரம் செய்த போது அவ்வழியாக வந்த ஆம்புலன்ஸை மறித்து டிரைவர் மற்றும் உதவியாளரை அதிமுகவினர் தாக்கினர். இதையடுத்து, பல்வேறு மாவட்டங்களில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் சார்பில் பாதுகாப்பு கேட்டு எஸ்.பியிடம் மனு அளித்திருந்தனர்.
இந்நிலையில், மதுரையை சேர்ந்த 108 ஆம்புலன்ஸ் டிரைவர் இருளாண்டி என்பவர், தமிழ்நாடு முழுவதும் உள்ள 108 ஆம்புலன்ஸ் பைலட்கள் மற்றும் அவசர மருத்துவ தொழில்நுட்ப ஊழியர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்குவதை உறுதிபடுத்துமாறு உத்தரவிட வேண்டும் என்று மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அரசுத் தரப்பில், டிஜிபி தரப்பில் பிறப்பிக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்கள் அனைத்து மாவட்ட எஸ்பிக்கள் மற்றும் போலீஸ் கமிஷனர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது எனக் கூறி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், அதிக போக்குவரத்து மிகுந்த பிரதான சாலைகளில் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் மற்றும் பொதுக்கூட்டங்கள் நடத்த அனுமதி வழங்கக்கூடாது.
தவிர்க்க முடியாதபட்சத்தில், அனுமதிக்கும் போது போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் அது குறித்து பொதுமக்களுக்கு முன்கூட்டியே தெரிவித்திருக்க வேண்டும். சாலை ஓரங்களில் அல்லது பொது சந்திப்புகளுக்கு அருகில் கூட்டங்கள் நடத்தும்போது போதிய பாதுகாப்பு வசதி மற்றும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும், பொதுமக்களின் சிரமத்தைத் தடுக்கவும் போதுமான காவலர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தியிருக்க வேண்டும்.
108 ஆம்புலன்ஸ்கள், தீயணைப்பு மற்றும் மீட்பு வாகனங்கள் மற்றும் காவல் மீட்புப் பிரிவுகள் உட்பட அனைத்து அவசரகால வாகனங்களும் தடைகள் இல்லாமல் செல்ல முடியும் என்பதை முன்கூட்டியே திட்டமிட்டு உறுதிப்படுத்த வேண்டும். மாற்று பாதைகளையும் சரி செய்து வைத்திருக்க வேண்டும். பொதுக் கூட்டங்களில் அசம்பாவித சம்பவங்களைத் தவிர்க்க சரியான தடுப்புகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் சரியான முறையில் செய்திருக்க வேண்டும்.
மிகப்பெரிய அளவிலான பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டம் நடைபெறும்போது அருகில் உள்ள மருத்துவமனைகள், தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்கு முன்கூட்டிய தகவல் தெரிவிக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இதையடுத்து நீதிபதிகள் மனு மீதான விசாரணையை வரும் 15ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.