அழைப்பு வந்த பிறகே அரசு ஆம்புலன்ஸ் சென்றது; தவெகவினர் மின் கம்பம் மீது ஏறியதால் சிறிது நேரம் மின்தடை : தமிழக அரசு விளக்கம்
சென்னை : கரூர் அசம்பாவித நிகழ்வு தொடர்பாக வீடியோ ஆதாரங்களுடன் தமிழ்நாடு ஊடகத்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ் விளக்கம் அளித்துள்ளார். விஜய் பங்கேற்ற நாமக்கல், கரூர் கூட்ட நெரிசல் குறித்த வீடியோ ஆதாரத்தை வெளியிட்டு அரசு தரப்பு விளக்கம் அளித்தது. எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாமல் த.வெ.க. தொண்டர்கள் கூரை மீதும், விளம்பர போர்டுகள் மீதும் ஏறிய காட்சிகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. காவல்துறை இல்லை என்றால் கரூர் பைபாஸில் இருந்து பிரச்சாரத்துக்கு வந்திருக்க முடியாது என விஜய் பேசிய காட்சிகளும் வீடியோவில் இடம்பெற்றுள்ளன.
தமிழ்நாடு ஊடகத்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ் அளித்த விளக்கம் பின்வருமாறு..
*தவெகவினர் முதலில் கேட்ட இடத்தில் அமராவதி ஆற்றுப் பாலமும், பெட்ரோல் பங்க்கும் உள்ளது, இரண்டாவதாக உழவர் சந்தை பகுதி மிகக் குறுகிய இடம் என்பதால் 5,000 பேர் மட்டுமே திரள முடியும். வேலுசாமிபுரம் ஒதுக்கீடு செய்வதாகக் கூறியபோது அதனை தவெகவினர் ஏற்றுக் கொண்டனர்.
*10,000 பேர் வருவார்கள் என த.வெ.க. தரப்பில் கடிதம் எழுதியிருந்தார்கள். முந்தைய கூட்டங்களை வைத்து 20,000 பேர் வருவார்கள் எனக் கணித்து அதற்கேற்ப காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பொதுவாக 50 பேருக்கு ஒரு காவலர் என்பதே நடைமுறை, ஆனால் கரூரில் 20 பேருக்கு ஒரு காவலர் போடப்பட்டது.
*கரூரில் ஏற்கனவெ திரண்டிருந்தவர்களுடன் விஜய் வாகனத்தில் பின்னால் வந்தவர்களும் சேர்ந்ததால் கூட்டம் அதிகரித்தது. கரூர் த.வெ.க. கூட்டத்தில் காவல்துறை தடியடி நடத்தவில்லை. விஜய் பரப்புரை வாகனம் கூட்டத்திற்குள் வர முடியாத அளவுக்கு இருந்தால், போலீசார் கூட்டத்தை விலக்கினர். ஒரு கட்டத்திற்கு மேல் செல்ல வேண்டாம் என டி.எஸ்.பி. எச்சரித்தும் அவர்கள் அதனை ஏற்கவில்லை.
*த.வெ.க. தொண்டர்கள் மரத்தின் மீது மின்கம்பம் மீதும் ஏறியதால் சிறிது நேரம் மட்டுமே மின்சாரம் நிறுத்தப்பட்டது. மின்கம்பத்தில் இருந்து த.வெ.க.வினரை இறக்கிவிட்டவுடன் உடனடியாக மின்சாரம் வழங்கப்பட்டது. ஜெனரேட்டரை சுற்றியுள்ள தகடுகளை தவெகவினர் பிரித்துச் சென்றதால் பாதுகாப்பு கருதி மின்சாரம் நிறுத்தப்பட்டது, தவெக துண்டு அணிந்தவர்தான் மின்சார ஜெனரேட்டரை ஆஃப் செய்தனர்.
*கரூர் கூட்டத்திற்கு கட்சியினர் 5 ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்திருந்தனர். விஜய் வாகனத்துடன் 2 ஆம்புலன்ஸ்கள் வந்தன. சிலர் மயக்கம் அடைந்த தகவல் அறிந்து கூட்டத்திற்குள் முதலில் வந்தது த.வெ.க. ஏற்பாடு செய்த ஆம்புலன்ஸ்தான். பலர் மயங்கி விழுந்ததால் அடுத்தடுத்து 33 ஆம்புலன்ஸ் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன. அவசர தேவைக்காக தயார் நிலையில் அரசு சார்பில் 6 ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன.
*கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 220 மருத்துவர்கள், 165 செவிலியர்கள் உள்ளனர். நெரிசல் பற்றி அறிந்து சேலம், திருச்சி, திண்டுக்கலில்|இருந்து மருத்துவர்கள் வழவழைக்கப்பட்டனர்.அதிக உயிரிழப்புகள் நடக்கும்போது ஆட்சியர் அனுமதியுடன் இரவில் உடற்கூராய்வு செய்யலாம், அருகாமை மாவட்டங்களில் உள்ள தடய அறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு இரவிலேயே உடற்கூராய்வு செய்யப்பட்டது.