அமெரிக்க வரிவிதிப்பால்... ஆம்பூர், வேலூர், ராணிப்பேட்டை தோல் தொழில் நிறுவனங்களுக்கு கோடிக்கணக்கில் ஆர்டர்கள் இழப்பு: 25,000 தொழிலாளர்கள் தவிப்பு
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு ஆம்பூர், வேலூர், ராணிப்பேட்டை, பேர்ணாம்பட்டு, வாணியம்பாடி உள்ளிட்ட நகரங்களில் இருந்து அதிக அளவில் தோல் தயாரிப்பு பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. ரூ.18 ஆயிரம் கோடி அளவில் ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், இந்திய அரசிற்கு இதுகுறித்து முடிவெடுக்க அமெரிக்கா நிபந்தனை விதித்து கெடு வழங்கியது. அந்த கெடு முடிந்த நிலையில் நேற்று முன்தினம் முதல் புதிய வரி விதிப்பு அமலுக்கு வந்ததாக அமெரிக்கா அறிவித்தது. இதன் காரணமாக ஆம்பூரில் இருந்து தோல் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு கூடுதல் தள்ளுபடி வழங்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் ஆம்பூர், வாணியம்பாடி உள்ளிட்ட தமிழக நிறுவனங்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பால் தோல் தொழிலில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டிற்கு பாதிப்பு அதிகமாக உள்ளது.
இதுகுறித்து ஆம்பூர் பொருளாதார மண்டல நிறுவனத்தின் தலைவரும், முன்னாள் தோல் ஏற்றுமதி கழகத்தின் தலைருமான மெக்கா ரபீக் அஹ்மத் கூறியதாவது: உலக அளவில் தமிழகத்தின் தோல் பொருட்கள் தங்களுக்கென ஒரு முத்திரை பதித்தவையாக உள்ளன. குறிப்பாக அமெரிக்க தோல் இறக்குமதியாளர்களின் நம்பிக்கைக்கு உரியதாக இந்த நிறுவனங்கள் இன்றளவும் திகழ்கின்றன. அமெரிக்காவில் உள்ள நிறுவனங்களின் ஆர்டர்கள் மிக பெரியவை. அவற்றை பூர்த்தி செய்ய கூடிய தொழில்நுட்பம் மற்றும் திறமை வாய்ந்த தொழிலாளர்களை கொண்டதாக நம் தொழில் நிறுவனங்கள் உள்ளன.
உலக அளவில் 5ல் ஒரு பகுதி அமெரிக்க ஆர்டர்களை இந்திய தோல் மற்றும் ஷூ தயாரிப்பு நிறுவனங்கள் கொண்டுள்ளன. அமெரிக்காவின் 50 சதவீத கூடுதல் வரியால் சுமார் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பிலான இந்திய தோல் தொழில் பாதிக்கப்படும். உலக அளவில் சுமார் 20 சதவீத ஆர்டர்களை வழங்கும் நாடாக அமெரிக்கா உள்ளது. இந்த ஆர்டர்களை நாம் இழந்தோம் எனில் திரும்ப பெறுவது கடினமாக இருக்கும். மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தான் திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூர், வாணியம்பாடி மற்றும் ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டத்தில் பேர்ணாம்பட்டு ஆகிய தோல் தொழில் கேந்திரங்கள் உள்ளன.
இதனால் தான் இந்த பகுதிகளில் தோல் தொழில் பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. அமெரிக்க ஆர்டர்களை வேறு நாடுகளுக்கு மாற்றுவது என்பது இயலாத நிலை உள்ளது. வடிவமைப்பு, விலை, ஆர்டரின் அளவு, உற்பத்தி கால அளவு, ஏற்றுமதி ஆகியவை அமெரிக்காவிற்கும் மற்ற நாடுகளுக்கும் வித்தியாசம் உள்ளது. அமெரிக்காவை தவிர்த்து வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி என்றால் குறைந்தபட்சம் 6 முதல் 12 மாதங்கள் அவற்றிற்கான திட்டமிடல், மாதிரிகள் தயாரித்தல், விலை நிர்ணயம், தயாரிப்பு என பல்வேறு நிலை பேச்சுவார்த்தைகள் நடத்தி இறுதி பொருள் தயாரிப்பு செய்யப்பட வேண்டும். அமெரிக்காவின் இந்த கூடுதல் வரியால் நேரடியாக சுமார் 15 ஆயிரம் பேரும், மறைமுகமாக சுமார் 10 ஆயிரம் பேரும் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதற்கு ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் கோவிட் காலத்தில் அளித்த சலுகைகளைபோல பிஎப் மற்றும் இஎஸ்ஐ ஆகியவற்றை அரசே கட்டி தரவும், இதுபோன்ற பணிநீக்க காலங்களில் 50 சதவீதம் தொழிலாளர்களுக்கான தொகை, தொழில்நிறுவனங்கள் வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய கடன் வட்டி விகிதங்களை பாதியாக குறைத்து தருவது, ஏற்றுமதி ஊக்க தொகை வழங்குவது ஆகிய சலுகைகளை அரசுகள் வழங்கினால் தோல் தொழில் புத்துயிருடன் உலக சந்தையை தக்க வைக்கும். வெளிநாடுகளில் தொழில் நிறுவனங்கள் வளர்ச்சிக்காக 5 சதவீதம் வட்டி விகிதம் அவைகளின் கடனுக்காக நிர்ணயிக்கப்பட்டு பெறப்படுகின்றன.
இந்தியாவில் 10 சதவீதம் உள்ள கடன் வட்டி விகிதத்தை 5 சதவீதமாக மாற்றி தந்தால் பயன் தருவதாக அமையும். ஒன்றிய அரசு காட்டன் இறக்குமதிக்கு சலுகை அளித்ததை போன்று தோல் தொழிலுக்கும் உரிய சலுகையை வழங்கவும், தொழில்பாதிப்பால் செலுத்த வேண்டிய வங்கி வட்டி செலுத்தும் கால அளவில் நீட்டிப்பு மற்றும் சலுகைகளை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், ஆம்பூரில் அமெரிக்காவிற்கு தோல் மற்றும் ஷூ தயாரித்து ஏற்றுமதி செய்து வந்த தொழில் நிறுவனங்கள் தங்களது கடைசி ஆர்டர்களை பூர்த்தி செய்து ஏற்றுமதி செய்துள்ளன. அவற்றில் சில அமெரிக்க நிறுவனங்களுக்கு கூடுதல் தள்ளுபடி செய்து பொருட்களை அனுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தியாவிற்கு 50 சதவீத கூடுதல் வரி உள்ள நிலையில் அண்டை நாடுகளுக்கு அமெரிக்கா 19 சதவீத வரியை மட்டுமே விதித்துள்ளது எனவும், இதனால் இந்திய தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளதாகவும் தோல் தொழில் தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இரண்டு அல்லது மூன்று சதவீதம் கூடுதல் வரி இருந்தால் சமாளிக்கும் நிலையில் அவற்றை விட கூடுதலாக 31 சதவீத வரி என்பதால் இந்திய பொருட்களை வாங்க அமெரிக்க நிறுவனங்கள் ஆர்வம் குறைந்துள்ளன. ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் அன்னிய செலாவணியை அதிக அளவில் ஈட்டி தரும் தோல் தொழில் நிறுவனங்களுக்கு உரிய சலுகைகளை அறிவித்து அமெரிக்க வர்த்தகத்தை தொடர உதவ வேண்டும் என்பது இந்த நேரத்தில் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.