Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆம்பூர் அடுத்த மலையாம்பட்டில் 500 ஆண்டுகள் பழமையான நடுகற்கள் கண்டெடுப்பு

திருப்பத்தூர்:ஆம்பூர் அடுத்த மலையாம்பட்டு கிராமத்தில் 500 ஆண்டுகள் பழமையான 4 நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் க.மோகன் காந்தி, ஆங்கிலத்துறை பேராசிரியர் வ.மதன்குமார், காணி நிலம் மு.முனுசாமி, பிரியதர்ஷினி பொறியியல் கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் வெ.காமினி, சித்த மருத்துவர் கோ.சீனிவாசன் ஆகியோர் மேற்கொண்ட களஆய்வில் 4 நடுகற்கள், பழங்கால பானை ஓடுகள், இரும்பு கசடுகள் மற்றும் செங்கற்கள் ஆகியவற்றை கண்டெடுத்துள்ளனர்.

இதுகுறித்து பேராசிரியர் க.மோகன் காந்தி கூறியுள்ளதாவது: ஆம்பூர் வட்டம், மலையாம்பட்டு கிராமத்தில் இருந்து தென்னம்பட்டு செல்லும் வழியில் கிருட்டிணசாமி என்பவர் நிலத்தில் மண் மூடிய நிலையில் நடுகல் இருந்தது.

இதை சுத்தம் செய்து ஆராய்ச்சி செய்தோம். இந்நடுகல்லானது 3 அடி உயரமும், 2 அடி அகலமும் கொண்ட அழகான பலகைக் கல்லில் புடைப்பு சிற்பமாக உள்ளது. விஜய நகர காலத்தை சேர்ந்த நடுகல்லாக தெரிகிறது.

ஏறத்தாழ 500 ஆண்டுகள் பழமை உடையதாகும். நடுகல்லில் வீரன் குதிரையின் மேல் அமர்ந்த கோலத்தில் உள்ளான். இடது கை குதிரையின் கடிவாளத்தை பிடித்த வண்ணம் உள்ளது. வலது கையில் குத்துவாள் ஒன்று உள்ளது. வீரனின் முகம் அழகாக ஒரு பக்கமாக செதுக்கப்பட்டுள்ளது. தலையின் மேல் கிரீடம் போன்ற அமைப்பு உள்ளது. இவன் இப்பகுதியை ஆட்சி செய்த சிற்றரசனாக இருக்க வாய்ப்புள்ளது.

வீரன் அமர்ந்திருக்கும் குதிரை ஓடும் கோலத்தில் கால்களும், வாலும் சித்தரிக்கப்பட்டு உள்ளது. குதிரையின் நீண்ட காதுகள், வாயில் கடிவாளம் உள்ளன. வீரனின் இடதுகை ஓரத்தில் சிறியதாக ஒரு பெண் உருவம் உள்ளது. இப்பெண் இவ்வீரனின் மனைவியாவார்.

இவ்வீரன் போரிலே இறந்தவுடன் இப்பெண் உடன்கட்டை ஏறி உயிர்விட்டதை இச்சிற்பம் வெளிப்படுத்துகிறது. அப்பெண் உருவத்தின் அருகில் கள்குடம் அல்லது கெண்டி ஒன்று உள்ளது. இது உடன்கட்டை ஏறும் பெண்கள் கையில் வைத்திருக்கும் குறியீடுகளில் ஒன்றாகும். கள் குடத்திற்கு அருகே ஒரு குதிரையின் உருவம் உள்ளது. இக்குதிரைப் பின் கால்களை தரையில் ஊன்றி மேற்கால்களை தூக்கிய வண்ணம் உள்ளது.

இப்பகுதியில் நடைபெற்ற போரின்போது வீரனும், அவன் மனைவியும், அவ்வீரனின் குதிரையும், மற்றொரு குதிரை என 4 பேர் உயிரிழந்த செய்தியை இந்நடுகல் வெளிப்படுத்துகிறது.

இந்நடுகல் இருக்கும் இடம் பரந்த வயல்வெளியாகும். இப்பகுதி முழுவதும் கருப்பு, கருப்பு- சிவப்பு பானை ஓடுகள், இரும்பு பொருட்களை செய்ததற்கான அடையாளமாக இரும்பு கசடுகள் மற்றும் பழங்கால செங்கற்கள் என இந்நிலம் முழுவதும் ஆங்காங்கே சிதறிக் கிடப்பதை காண முடிகிறது.

இப்பகுதி பாலாற்றங்கரைக்கு வடக்கே 3 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இப்பகுதியை தொல்லியல் துறை ஆய்வு நடத்தினால் கீழடி போன்ற புதையுண்ட பொருட்கள் கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன.

இவ்வூரின் ஏரிக்கரையில் கிழக்கு திசையை நோக்கிய வண்ணம் 3 நடுகற்கள் உள்ளன. இவை இரண்டடி உயரம், இரண்டடி அகலத்தில் காணப்படுகின்றன. முதல் நடுகல் வீரனின் உருவத்தை தாங்கியுள்ளது. இது தேய்ந்த நிலையில் காணப்படுகிறது.

இரண்டாவது நடுகல் வலது கையில் வாள் ஒன்றை வைத்துள்ளது. இடையில் இடைக் கச்சும், குறுவாளும் காணப்படுகிறது. இடது பக்கம் வளிமுடிக்கப்பட்ட கொண்டையோடு வீரன் காட்சித் தருகிறார்.

மூன்றாவது நடுகல் தேய்ந்து உருவங்கள் சரிவர தெரியவில்லை. வீரனின் தலைப்பகுதி உடைந்துள்ளது. கையிலே வாளோடு வீரன் காட்சித் தருகிறார். இப்பகுதியில் உள்ள நடுகற்களை தொல்லியல் துறை பாதுகாக்க வேண்டும். இவ்விடத்தில் அகழ்வாராய்ச்சியை மேற்கொண்டால் தமிழரின் அரிய பல பண்பாட்டு செய்திகள் வெளிப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.