அம்பேத்கர், திருவள்ளுவர் குறித்து அவதூறு பேச்சு விஎச்பி முன்னாள் நிர்வாகி மணியன் மீது குற்றச்சாட்டு பதிவு: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு
சென்னை: அம்பேத்கர், திருவள்ளுவர் குறித்து அவதூறு பேசிய வழக்கில் விஷ்வ ஹிந்து பரிஷத் முன்னாள் துணைத்தலைவர் மணியனுக்கு எதிராக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது. சென்னை தியாகராயநகரில் கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய, விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் மாநில துணைத் தலைவரும், விவேக பாரதி அமைப்பின் நிறுவனருமான பால வெங்கட சுப்பிரமணியன் என்ற ஆர்.பி.வி.எஸ்.மணியன், திருவள்ளுவர், அம்பேத்கர் மற்றும் பட்டியல் இனத்தவர்கள் குறித்து இழிவாக பேசியதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மத்திய சென்னை முன்னாள் மாவட்ட தலைவர் இரா.செல்வம் புகாரளித்தார்.
அதனடிப்படையில், மணியன் மீது, வன்கொடுமை தடைச்சட்டம் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த மாம்பலம் போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் அவருக்கு ஜாமீனும் வழங்கப்பட்டது. இந்த நிலையில், வழக்கில் இருந்து தம்மை விடுவிக்கக்கோரி ஆர்.பி.வி.எஸ்.மணியன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் குற்றச்சாட்டு பதிவுக்காக நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கில் குற்றச்சாட்டு பதிவுக்காக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பு ஆர்.பி.வி.எஸ்.மணியன் நேற்று நேரில் ஆஜராகியிருந்தார்.
அரசு தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் எம்.சுதாகர் ஆஜராகி ஆவணங்களை தாக்கல் செய்தார். அப்போது, உங்கள் மீதான குற்றச்சாட்டுகளை நீங்கள் ஏற்று கொள்கிறீர்களா என்று மணியனிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த மணியன் தன்மீதான குற்றச்சாட்டுகளை ஏற்க மறுப்பதாக தெரிவித்தார். இதையடுத்து, குற்றச்சாட்டுகளை பதிவு செய்த நீதிபதி, சாட்சி விசாரணைக்காக வழக்கு ஆகஸ்ட் 14ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.