அம்பத்தூர்: அம்பத்தூரில் முன்வீலை தூக்கியபடி வாலிபர் பைக் ரேஸில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை வண்டலூர் மற்றும் புழல் பகுதியை இணைக்கு புறவழிச்சாலையில், நாளொன்றுக்கு லட்சக்கணக்கான வாகனங்கள் பயணம் செய்கின்றன. இந்த சாலையில் இளைஞர்களின் பைக் ரேஸ் மற்றும் சாகச பயணம் அதிகரித்து வருகிறது. இதை போக்குவரத்து போலீசாரும், நெடுஞ்சாலைகளில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரும் கண்டுகொள்வதில்லை என வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதனிடையே, சென்னை புறவழிச்சாலையில் அம்பத்தூர் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் அருகில் இளைஞர்கள் சிலர் அதிவேகமாக பைக் ரேஸ் செல்வதும், முன்சக்கரத்தை தூக்கியபடி அபாயகரமாக வாகனம் ஓட்டும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளனர். இந்த சம்பவத்தால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இதுகுறித்த புகாரின்பேரில் அம்பத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.