Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அம்பலம்

கர்நாடக மாநிலம் தர்மஸ்தலா விவகாரம் தான் தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. தர்மஸ்தலா நேத்ராவதி ஆற்றங்கரையோரம் நூற்றுக்கணக்கான பெண்களின் சடலங்களை புதைத்ததாக அக்கோயிலின் முன்னாள் தூய்மைப்பணியாளர் நீதிமன்றத்தில் ஒரு மண்டை ஓடு எடுத்துக்கொண்டு சென்று வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து கர்நாடக அரசு சிறப்பு விசாரணை குழு அமைத்து தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டது.

டிஜிபி பிரணாவ் மொகந்தி தலைமையிலான எஸ்ஐடி போலீசார் புகார்தாரர் சின்னையா தர்மஸ்தலா வனப்பகுதியில் காட்டிய 16 இடங்களில் 25 அடி ஆழம் வரை தோண்டி பார்த்தனர். இதில் சில எலும்பு கூடுகள் கிடைத்தன. ஆனால் அவர்கள் தற்கொலை செய்து கொண்டவர்கள் என்று தெரியவந்தது. புகார்தாரர் சின்னையா கூறியபடி நூற்றுக்கணக்கான பெண்கள் சடலங்கள் புதைக்கப்பட்டதற்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. இதையடுத்து பாஜ உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கர்நாடக காங்கிரஸ் அரசை கடுமையாக விமர்சித்தன.

கோயிலின் புனித தன்மையை கெடுப்பதற்கும், அவப்பெயரை ஏற்படுத்தவும் ஏதோ சதி நடந்திருக்கிறது. இதற்கு சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு துணைபோய் இருக்கிறது என்று குற்றம்சாட்டினர். இடதுசாரிகள் வெளிநாட்டில் இருந்து நிதியுதவி செய்து தர்மஸ்தலா கோயிலுக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதாக பாஜ தலைவர்கள் பேரணி நடத்தினர். வழக்கு விசாரணையை தேசிய புலனாய்வுக்கு விட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இதையடுத்து புகார்தாரர் மீது எஸ்ஐடிக்கு சந்தேகம் எழுந்தது. அவரை கைது செய்து விசாரித்த போது நீதிபதி முன் நான் சிலரின் தூண்டுதல் பேரில் பொய் புகார் அளித்தேன். என்னை மன்னித்துவிடுங்கள் என்று கூறினார். இதையடுத்து அவர் அளித்த வாக்குமூலத்தில் மங்களூரு உஜிரேவில் வசிக்கும் இந்து அமைப்பை சேர்ந்த மகேஷ் ஷெட்டி திமரோடி வீட்டில் சில மாதங்கள் தங்கியிருந்ததாக கூறினார். இதையடுத்து இந்த வழக்கு விசாரணை திசை திரும்பியது.

இந்து அமைப்பை சேர்ந்த திமரோடி ஏற்கனவே பாஜ தலைவர் பி.எல்.சங்கரை அவதூறாக பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார். இவரை துணை முதல்வர் டி.கே.சிவகுமாரும் சட்டப்பேரவையில் கண்டித்தார். எந்த கட்சி தலைவரையும் தரக்குறைவாக விமர்சித்தால் அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் என்று கூறினார்.  இந்நிலையில், தர்மஸ்தலா புகார்தாரர் சின்னையாவை எஸ்ஐடி அதிகாரிகள் திமரோடி வீட்டுக்கு நேரில் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டதில் முக்கிய ஆவணங்கள் சிக்கின. தர்மஸ்தலா விவகாரத்தில் வெளிநாட்டு சதி இருக்கிறது. இடது சாரிகள் கைவரிசை காட்டியுள்ளனர் என்ற யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இந்து அமைப்பை சேர்ந்த தலைவர் ஒருவரே இதன் பின்னணியில் இருப்பது பாஜவுக்கு கடும் அதிர்ச்சியை தந்துள்ளது. இருந்தாலும் மகேஷ்ஷெட்டி திமரோடிக்கு பாஜ எந்தவகையிலும் ஆதரவளிக்காது என்று கூறும் தலைவர்கள் சட்டம் தனது கடமையை செய்யும் என்று கூறி நழுவிக்கொண்டனர்.

இதற்கிடையில், கையில் மண்டை ஓடுடன் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்த சின்னையா எடுத்து வந்த மண்டை ஓடு ஆய்வகத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அது 40 ஆண்டு பழமையானது என்று ஆய்வில் தெரியவந்தது. தனது மகளை காணவில்லை என்று கூறி புகார் அளித்த சுஜாதா பட் என்ற மூதாட்டி எஸ்ஐடியிடம் பகிர்ந்த புகைப்படத்தில் இருக்கும் பெண் அவரது மகள் இல்லை என்பதும் திருமணமாகி மரணமடைந்த ஒருவர் என்றும் தெரியவந்துள்ளது.