Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அம்பாலா விமானப்படை தளத்திலிருந்து ரபேல் போர் விமானத்தில் பறந்தார் ஜனாதிபதி முர்மு: வரலாற்று சாதனை படைத்தார்

அம்பாலா: ஜனாதிபதி திரவுபதி முர்மு அரியானாவின் அம்பாலா விமானப்படை தளத்திற்கு நேற்று காலை வந்தார். அங்கு அவருக்கு விமானப்படை வீரர்கள் அணிவகுப்பு மரியாதை அளித்தனர். அதைத் தொடர்ந்து, ஆயுதப்படைகளின் உச்ச தளபதியான ஜனாதிபதி முர்மு ரபேல் போர் விமானத்தில் பறந்தார். இதற்காக ராணுவ சீருடையில் வந்த அவர் காலை 11.30 மணி அளவில் ரபேல் விமானத்தில் இருந்தபடி கை அசைத்தார்.

இந்த விமானத்தை, 17வது படைப்பிரிவின் குரூப் கேப்டன் அமித் கெஹானி இயக்கினார். விமானப்படை தளபதி ஏ.பி.சிங்கும், வேறொரு விமானத்தில் உடன் பயணித்தார். ஜனாதிபதி முர்மு பறந்த ரபேல் விமானம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 15,000 அடி உயரத்திலும் மணிக்கு 700 கிமீ வேகத்திலும் பறந்தது. இந்த பயணம் 30 நிமிடங்கள் நீடித்ததாகவும், சுமார் 200 கிமீ தூரத்தை கடந்து மீண்டும் விமானப்படை தளத்தை ரபேல் வந்தடைந்ததாகவும் ஜனாதிபதி மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வின் போது, ரபேல் மற்றும் இந்திய விமானப்படையின் செயல்பாட்டுத் திறன்கள் குறித்தும் ஜனாதிபதியிடம் விளக்கப்பட்டது. இதன் மூலம் ரபேல் போர் விமானத்தில் பறந்த முதல் இந்திய ஜனாதிபதி என்ற வரலாற்று சாதனையை முர்மு படைத்துள்ளார். ஏற்கனவே அவர் சுகோய் போர் விமானத்தில் பறந்துள்ளார்.

* மறக்க முடியாத அனுபவம்

ரபேலில் பறந்தது குறித்து வருகையாளர் புத்தகத்தில் குறிப்பிட்ட ஜனாதிபதி முர்மு, ‘‘ரபேல் போர் விமானத்தில் பறந்தது எனக்கு மறக்க முடியாத அனுபவம். ’’ என்றார்.

* ரபேலின் முதல் பெண் விமானியுடன் முர்மு

இந்த பயணத்தின் போது, ஜனாதிபதி முர்முவுடன், ரபேல் விமானப்படை பிரிவின் முதல் பெண் விமானி ஷிவாங்கி சிங் எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகி உள்ளது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, ஷிவாங்கி இயக்கிய ரபேல் போர் விமானத்தை பாகிஸ்தான் சுட்டுவீழ்த்தியதாகவும் ஷிவாங்கியை போர் கைதியாக பிடித்ததாகவும் பாகிஸ்தான் ஆதரவு சமூக ஊடக சேனல் செய்தி வெளியிட்டது. தற்போது ஜனாதிபதியுடன் ஷிவாங்கி இருக்கும் இந்த புகைப்படம் பாகிஸ்தானின் பொய்களை அம்பலப்படுத்தும் வகையில் உள்ளது.