அமேசான் ஊழியர்கள் 14 ஆயிரம் பேர் பணிநீக்கம்: இ-மெயில் பார்க்காமல் வேலைக்கு வந்தவர்களை செக்யூரிட்டிகள் திருப்பி அனுப்பிய பரிதாபம்
வாஷிங்டன்: அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் அமேசான் நிறுவனம், ஆன்லைன் வர்த்தகம், கிளவுட் கம்ப்யூட்டிங், ஆன்லைன் விளம்பரம், டிஜிட்டல் ஸ்ட்ரீமிங், ஏ.ஐ உள்பட பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில், அந்நிறுவனம் நேற்று முன்தினம் முதல் 30,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் நடைமுறையை தொடங்கி உள்ளது. ஏ.ஐ. பயன்பாடு மற்றும் ரோபோ பயன்பாடு உள்ளிட்டவற்றை அதிகரித்து ஊழியர்களை வெளியேற்றி வருகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் 14,000 ஊழியர்கள் ஒரே நேரத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டனர். ஊழியர்களுக்கு இ-மெயில் மூலமாகவும், இ-மெயில் இல்லாதவர்கள் ‛ஹெல்ப் டெஸ்க்கில்’ பணியாற்றுவோர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பணி நீக்கம் பற்றிய தகவலை தெரிவித்தனர்.
இதுதொடர்பாக ஊழியர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட இ-மெயிலில் கூறப்பட்டுள்ளதாவது: உங்களுடன் பகிர்ந்து கொள்ள எனக்கு சில முக்கியமான விஷயம் உள்ளது. ஆனால் இது கடினமான செய்தியாக இருக்கிறது. எங்களின் நிறுவனம் முழுமையாக மதிப்பாய்வு செய்தது. அதன்பிறகு அமேசான் முழுவதும் பணி நீக்க நடவடிக்கையை எடுத்துள்ளோம். துரதிர்ஷ்டவசமாக நீங்கள் பணி நீக்கம் செய்யப்படுகிறீர்கள். இந்த முடிவை சாதாரணமாக எடுத்து விடவில்லை. கடினமாகதான் எடுத்தோம். அடுத்த 90 நாட்கள் (3 மாதம்) முழு ஊதியம் மற்றும் பிற சலுகைகள் வழங்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் அலுவலகத்துக்கு வர அனுமதி இல்லை. இதனால் அலுவலகத்தில் இருப்பவர்கள், செக்யூரிட்டிகள் மூலமாக வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதாவது இந்த இ-மெயில் நேற்று முன்தினம் காலையில் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த இ-மெயில் செல்வதற்குள் பலரும் பணிக்கு வந்துவிட்டதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இன்னும் சிலர் பணிக்கு வந்து கொண்டிருந்தபோது வேலை நீக்க இ-மெயிலை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
