தாராபுரம்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சுல்தானியா தெருவில் வசிப்பவர் அசன் முகமது (30). தள்ளுவண்டியில் டிபன் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி சாஜிதா பானு. இத்தம்பதிக்கு குழந்தை இல்லை. அசன் முகமதுவின் அண்ணன் தையூம் அன்சாரி (34). டெய்லர். இவரது மனைவி அனிஷ்பாத்திமா (37) இத்தம்பதிக்கு ரம்ஜான் பேகம்(13) என்ற 8ம் வகுப்பு படிக்கும் மகளும், ஒரு மகனும் உள்ளனர். இவர்களது உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சி அலங்கியத்தில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து நேற்று நடைபெற இருந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க அசன் முகமது, தையூம் அன்சாரி ஆகியோர் குடும்பத்துடன் சென்றிருந்தனர்.
நேற்று பிற்பகல் உறவினர்கள் பலரும் அலங்கியம் அடுத்த செலாம்பாளையம் அருகே உள்ள அமராவதி ஆற்றின் தடுப்பணைக்கு குளிக்க சென்றனர். சித்தப்பா அசன் முகமதுவுடன் சிறுமி ரம்ஜான் பேகமும் குளிக்கச் சென்றார். அனைவரும் குளித்து கொண்டிருந்த போது ரம்ஜான் பேகம் எதிர்பாராத விதமாக தடுப்பணையில் இருந்து தவறி ஆழமான பகுதிக்குள் விழுந்து தத்தளித்தார். சிறுமியை காப்பாற்றுவதற்காக அசன் முகமதுவும் நீரில் குதித்தார். இருவருக்கும் நீச்சல் தெரியாததால் சிறிது நேரத்தில் இருவரும் நீரில் மூழ்கினர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் உள்ளூர்வாசிகளின் உதவியுடன் இருவரையும் சடலங்களாக மீட்டனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த அலங்கியம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

