Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வரும் 16ம்தேதி ஆனிவார ஆஸ்தானம்; திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை ஆழ்வார் திருமஞ்சனம்: 6 மணி நேரம் தரிசனம் ரத்து

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆனிவார ஆஸ்தானத்தையொட்டி நாளை கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடப்பதால் 6 மணி நேரம் பக்தர்கள் தரிசனம் நிறுத்தப்படுகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுக்கு 4முறை அதாவது யுகாதி, ஆனிவார ஆஸ்தானம், பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசிக்கு முன்னதாக வரும் செவ்வாய்க்கிழமைகளில் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி வரும் 16ம் தேதி ஆனிவார ஆஸ்தானம் நடைபெறுகிறது. இதையொட்டி நாளை காலை 6 மணிக்கு ஆழ்வார் திருமஞ்சனம் தொடங்குகிறது. கோயில் கருவறை உள்பட அனைத்து சன்னதிகளும், கோபுரம், பிரகாரம் அனைத்தும் தூய்மை படுத்தப்படும். பின்னர் பன்னீர், மஞ்சள், பச்சை கற்பூரம், கிச்சலி கட்டை, வெட்டிவேர், குங்குமம், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கலந்த புனித நீர் கோயில் முழுவதும் தெளிக்கப்படும்.

இதையடுத்து ஏழுமலையானுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். முன்னதாக ஆழ்வார் திருமஞ்சனத்தையொட்டி அதிகாலை 6 மணி முதல் பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்படும். சிறப்பு பூஜைகளுக்கு பின் மதியம் 12 மணியளவில் மீண்டும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். மேலும் திருமஞ்சனம் காரணமாக, நாளை நடைபெறும் அஷ்டதளபாத பத்ம ஆராதனை சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. நாளை மறுநாள்(16ம் தேதி) காலை 7 மணிக்கு கருடர் சன்னதி எதிரே உள்ள மணி மண்டபத்தில் தேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி சர்வபூபால வாகனத்திலும், சுவாமியின் படைத்தளபதியான விஷ்வக்சேனாதிபதியும் எழுந்தருள்வார்கள். பின்னர் உற்சவ மூர்த்திகள் மற்றும் மூலவர் ஏழுமலையானுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பிரசாதங்கள் சமர்பிக்கப்படும்.

மேலும் ரங்கம் ரங்கநாதர் கோயிலில் இருந்து தமிழக அரசு சார்பில் பட்டு வஸ்திரம் கொண்டு வரப்பட்டு சமர்பிக்கப்படும். இதைதொடர்ந்து மாலை 6 மணிக்கு மலையப்பசுவாமி, தேவி, பூதேவி தாயாருடன் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில், மாடவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார். ஆனிவார ஆஸ்தானம் காரணமாக 16ம் தேதி கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, அர்ஜித பிரம்மோற்சவம் மற்றும் சஹஸ்ர தீபலங்கார சேவை ஆகியவற்றை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.