Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆனிவார ஆஸ்தானத்தை முன்னிட்டு ஏழுமலையான் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம்: 6 மணி நேரத்திற்கு பிறகு பக்தர்கள் தரிசனம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆனிவார ஆஸ்தானத்தை முன்னிட்டு இன்று கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது. இதனால் 6 மணி நேரம் தரிசனம் நிறுத்தப்பட்டு பிறகு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆனிவார ஆஸ்தானம் நாளை நடைபெற உள்ளது. இதையொட்டி இன்று அதிகாலை சுப்ரபாதம் மற்றும் நித்ய பூஜைகளுக்கு பிறகு காலை 6 மணி முதல் 11 மணி வரை ஆழ்வார் திருமஞ்சனம் (கோயிலை சுத்தம் செய்யும் பணி) நடந்தது. இதனால் 6 மணி முதல் பக்தர்கள் தரிசனமும், அஷ்டதளபாத பத்ம ஆராதனை சேவையும் ரத்து செய்யப்பட்டது.

பின்னர் கருவறையில் மூலவர் ஏழுமலையான் மீது பட்டுவஸ்திரங்களால் மூடப்பட்டது. தொடர்ந்து கருவறை, ஆனந்த நிலையம், கொடிமரம், யோக நரசிம்ம சுவாமி, வகுலமாத, பாஷ்யகாரல சன்னதிகள், சம்பங்கி மண்டபம், ரங்கநாதர் மண்டபம், மகாதுவாரம் என அனைத்து இடங்களும் தூய்மைபடுத்தப்பட்டது. பின்னர் பச்சை கற்பூரம், திருச்சூனம், மஞ்சள், கிச்சலிகட்டை, சந்தனம் உட்பட பல்வேறு மூலிகை பொருட்கள் கொண்டு புனிதநீர் கோயில் முழுவதும் தெளிக்கப்பட்டது. இதையடுத்து ஏழுமலையானுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மதியம் 12 மணிக்கு பிறகு வழக்கம்போல் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

நாளை ஆனிவார ஆஸ்தான பூஜைகள் நடைபெற உள்ளது. இதையொட்டி காலை 7 மணிக்கு கருடர் சன்னதி எதிரே உள்ள மண்டபத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி சர்வபூபால வாகனத்திலும், விஷ்வக்சேனாதிபதியும் எழுந்தருள்வார்கள். பின்னர் உற்சவ மூர்த்திகள் மற்றும் மூலவர் ஏழுமலையானுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பிரசாதம் மற்றும் வரவு, செலவு கணக்குகள் சமர்பிக்கப்படும். மேலும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இருந்து தமிழக அரசு சார்பில் பட்டு வஸ்திரம் கொண்டு வரப்பட்டு சமர்பிக்கப்படும்.

இதைதொடர்ந்து மாலை 6 மணிக்கு மலையப்பசுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில், மாடவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார். ஆனிவார ஆஸ்தானம் காரணமாக நாளை கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, அர்ஜித பிரம்மோற்சவம் மற்றும் சஹஸ்ர தீபலங்கார சேவையை ஆகியவற்றை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது..

ரூ.4.72 கோடி காணிக்கை

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று 74,149 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 29,066 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். உண்டியலில் ரூ.4.72 கோடி காணிக்கை கிடைத்தது. இன்று காலை வைகுண்டம் கியூ காம்பளக்சில் உள்ள அனைத்து அறைகளும் நிரம்பிய நிலையில் வெளியே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இவர்கள் 24 மணி நேரத்திற்கு பிறகே தரிசனம் செய்வார்கள். ரூ.300 கட்டண டிக்கெட் பெற்றவர்கள் சுமார் 3 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.