மேற்கு ஆப்பிரிக்காவில் பயங்கரம்; 3 இந்தியர்களை கடத்திய அல்கொய்தா தீவிரவாதிகள்: மீட்கக் கோரி குடும்பத்தினர் கண்ணீர்
மாலி: மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில், கடந்த 1ம் தேதி கேய்ஸ் பகுதியில் இயங்கிவந்த ‘டைமண்ட் சிமெண்ட்’ என்ற தொழிற்சாலையில் பணியாற்றிய ராஜஸ்தானைச் சேர்ந்த பிரகாஷ் சந்த் ஜோஷி, தெலங்கானாவைச் சேர்ந்த அமரலிங்கேஸ்வர ராவ் மற்றும் ஒடிசாவைச் சேர்ந்த பொறியாளர் பி.வெங்கடராமன் ஆகிய மூன்று இந்தியர்கள் கடத்தப்பட்டனர். அல்கொய்தா தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய ‘ஜமாத் நுஸ்ரத் அல்-இஸ்லாம் வல்-முஸ்லிமீன்’ என்ற தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள், தொழிற்சாலை மீது ஆயுதமேந்திய தாக்குதல் நடத்தி இவர்களைக் கடத்திச் சென்றுள்ளனர்.
இந்த கடத்தலுக்கு இதுவரை எந்த அமைப்பும் அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்கவில்லை என்றாலும், இதன் பின்னணியில் ‘ஜமாத் நுஸ்ரத் அல்-இஸ்லாம் வல்-முஸ்லிமீன்’ அமைப்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. 3 இந்தியர்கள் கடத்தப்பட்ட சம்பவத்தால், அவர்களது குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். பிரகாஷ் சந்த் ஜோஷியின் மனைவி சுமன் ஜோஷி கூறுகையில், ‘என் கணவரை ஆயுதமேந்திய நபர்கள் தொழிற்சாலையிலிருந்து வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றனர். அதன்பிறகு அவரிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை’ என்று கண்ணீருடன் தெரிவித்துள்ளார். இதேபோல், அமரலிங்கேஸ்வர ராவின் மனைவி, ‘சம்பந்தப்பட்ட நிறுவனம் மூலம் எனது கணவர் கடத்தல் செய்தி கிடைத்தது. ஜூன் 30ம் தேதிக்கு பிறகு கணவருடன் பேசவில்லை’ என்றும் கூறியுள்ளார்.
மேலும் வெங்கடராமனின் தாயார், ‘என் மகன் போலீஸ் காவலில் இருப்பதாக முதலில் நிறுவனம் கூறியது; ஆனால் இப்போது அவர் கடத்தப்பட்டதாகக் கூறுகிறார்கள்’ என வேதனையுடன் தெரிவித்துள்ளார். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்த கடத்தலை உறுதிசெய்துள்ளதோடு, மாலி அரசு மற்றும் உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து மூவரையும் மீட்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. மாலியில் மட்டும் 400க்கும் மேற்பட்ட இந்தியர்கள் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.