கூட்டணி இல்லை என்று தவெக பலமுறை சொல்லியும் ‘பழம் நழுவி பாலில் விழப்போகிறது’ என எடப்பாடி பழனிசாமி காத்திருக்கிறார்: செல்வப்பெருந்தகை பேட்டி
சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எம்எல்ஏ, நேற்று இரவு மதுரையிலிருந்து விமானத்தில் சென்னை வந்தார். அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தவெக பலமுறை யாருடனும் கூட்டணி இல்லை என்று, சொல்லி வருகிறது. ஆனாலும் கூட்டணிக்கு வருவார். பழம் கனிந்து விட்டது என்று எடப்பாடி சொல்லிக் கொண்டு இருக்கிறார். பழம் நழுவி பாலில் விழப்போகிறது என சொல்லி வருகிறார்.
தேர்தலில் விஜய் பங்கு எப்படி இருக்கும் என்பதை காலம் தான் கணிக்கும். இப்போது எதுவும் சொல்ல முடியாது. துக்கமான நிகழ்வின்போது, தலைவர்கள் பேசுவது மனித பண்பு. அந்த அடிப்படையில் தான் விஜய்யுடன், ராகுல்காந்தி போனில் பேசினார். உடனே கூட்டணி என்று அதை ஏன் அரசியல் ஆக்குகிறீர்கள்? கரூர் துயரம் இன்னும் விலகவில்லை. அதை வைத்து அரசியல் செய்வது நாகரிகம் இல்லை. 41 உயிரை இழந்துள்ளோம்.
டிடிவி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் 3 பேரும் ஒற்றுமையாக இருக்கிறார்கள். இது மகிழ்ச்சி அடைய வேண்டியது. அதிமுகவை பற்றி, நான் பேசுவது நல்லதல்ல. அமலாக்கத்துறை இப்போது, எல்லாவற்றுக்கும் கடிதம் அனுப்புகிறது. அதேபோல் தான் இப்போதும் அனுப்பி இருக்கிறது. அதை எதிர்கொள்வோம் என்று அமைச்சரே கூறி விட்டார்.இவ்வாறு அவர் கூறினார். இந்தியாவின் 90வது கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெற்ற சென்னையைச் சேர்ந்த 16 வயதுடைய இளம்பரிதிக்கு செல்வபெருந்தகை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 
  
  
  
   
