நெல்லை: நெல்லை மகாராஜநகரில் உள்ள பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டில் ஒன்றிய அமைச்சர் எல்.முருகன், முன்னாள் மாநில தலைவர்கள் அண்ணாமலை, தமிழிசை, மூத்த தலைவர்கள் எச்.ராஜா, வானதி சீனிவாசன் எம்எல்ஏ, தமிழக பாஜ பொறுப்பாளர் சுதாகர்ரெட்டி, இணை பொறுப்பாளர் அரவிந்த் மேனன், பாஜ அமைப்பு செயலாளர் கேசவவிநாயகம் ஆகியோர் நேற்று பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளிப்பது குறித்து ஆலோசனை நடத்தினர். இதைத்தொடர்ந்து பாஜ மாநில தலைவர் நயினார்நாகேந்திரன் எம்எல்ஏ அளித்த பேட்டி:
காங்கிரஸ் ஆட்சியை காட்டிலும் பல லட்சம் கோடி ரூபாய்க்கு அதிகமான திட்டங்களை தமிழகத்துக்கு பிரதமர் மோடி அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அதில் நாடு முழுவதும் 140க்கும் மேற்பட்ட விமான நிலையங்கள், வந்தே பாரத் ரயில், ரயில் நிலையங்கள் விரிவாக்கம், இரட்டை ரயில் பாதைகள், பாதுகாப்பு காரிடர்கள் உள்ளிட்டவைகளாகும். பிரதமர் தமிழகம் வருவது ஒன்றும் புதிதல்ல. அவர் பலமுறை தமிழகத்துக்கு வந்து புதிய திட்டங்களை துவக்கி வைத்துள்ளார். கூட்டணி குறித்து அடிக்கடி என்னிடம் கேட்காதீர்கள். பிரதமரை ஓபிஎஸ் சந்திப்பது குறித்து எனக்கு ஒன்றும் தெரியாது.
இவ்வாறு அவர் கூறினார்.