புரிந்தால் புரிந்து கொள்ளுங்கள், இல்லை என்றால் சும்மா இருங்கள்: நான் தூக்கி போட்ட ரிமோட்ட வேறு ஒரு ஆளு தூக்கிட்டு ஓடிட்டான்; ரிமோட் ஸ்டேட்டில் இருக்கவே திமுகவுடன் கூட்டணி சேர்ந்தோம்: கமல் பரபரப்பு பேச்சு
வல்லம்: ரிமோட் ஸ்டேட்டில் இருக்க வேண்டும், வேறு ஒரு அளு தூக்கிட்டு ஓடிட்டான். அந்த ரிமோட் ஸ்டேட்டில் இருக்கவே திமுகவுடன் கூட்டணி சேர்ந்தோம் என்று கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே புதுக்கரியப்பட்டியில் கவிஞர் சினேகன் தந்தை படத்திறப்பு மற்றும் ‘‘நம்மவர் நூலகம், நம்மவர் படிப்பகம், நம்மவர் கலைக்கூடம்’’ஆகியவற்றுக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், எம்பியுமான கமல்ஹாசன் பேசியதாவது: பதவி வரும்போது, பணிவும், துணிவும் வரவேண்டும். பணிவுக்காக, துணிவை இழக்கும் சுயமரியாதை அற்றவர்கள் அல்ல எங்கள் கூட்டம். அரசியல் கட்சி ஆரம்பிக்காமல், முதலில் தொண்டு வழங்கி கொண்டு, பிறகு அரசியலில் வந்து மூத்தவர்களிடம், மூத்த கட்சிகளிடம் அறிவுரை பெற்றுக்கொண்டு கட்சி தொடங்கி இருக்கிறேன். அரசியலில் மாற்று கருத்து இருந்தே ஆக வேண்டும். அதற்கு பெயர் தான் ஜனநாயகம். ஆனால் நாடு என்று வரும்போது நாம் கூடி நின்றாக வேண்டும்.
எதற்காக திமுகவுடன் இணைந்தீர்கள், அதான் ரிமோட்டை தூக்கி டிவி மேல் போட்டீர்களே, ஏன் மறுபடி திமுக கூட்டணிக்கு போனீர்கள் என்று கேட்கிறார்கள். ரிமோட்டை தூக்கி போட்டேன். விமர்சிக்கும் உரிமை அனைவருக்கும் உண்டு. அதுதான் ஜனநாயகம். ரிமோட்டை தூக்கி போட்டேன். ஆனால், அந்த ரிமோட்டை வேறு ஆளு தூக்கிட்டு ஓடிட்டான். ஆகா ரிமோட் அங்கு போக கூடாது. ரிமோட் ஸ்டேட்டில் இருக்க வேண்டும். கல்வியும் அப்படித்தான் இருக்க வேண்டும் என நினைக்கிறோம். ரிமோட்டை நாங்கள் கொடுப்போமா, எடுத்துட்டு வா திருப்பி ஒளித்து வைத்துக்கொள்வோம். ஒருத்தர் மீது ஒருத்தர் அடித்துக்கொள்ள வேண்டாம். எவனாவது வந்து தூக்கி கொண்டு போய் விடுவார்கள். அப்படின்னு எடுத்த முடிவுதான் இந்த கூட்டணி. புரிந்தால் புரிந்து கொள்ளுங்கள், இல்லை என்றால் சும்மா இருங்கள். ஜனநாயகம் என்று வந்துவிட்டால் இந்த தொல்லைகள் எல்லாம் இருந்தே தீரும். அது வேண்டாம் என்றால் மாற்று அரசியல் என்பது பாசிசம். அது எங்களுக்கு வேண்டாம். இவ்வாறு அவர் பேசினார்.


