சென்னை: தமிழ்நாட்டில் திமுகவுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ் கட்சியில் 5 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. காங்கிரசின் இந்த அறிவிப்பால் நடிகர் விஜய் அதிர்ச்சி அடைந்து ள்ளார். தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு முக்கிய அரசியல் கட்சிகள் அனைத்தும் வேட்பாளர் தேர்வில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. தேர்தல் அறிவிப்பு வரும் மார்ச் மாதத்தில் வெளியாக வாய்ப்புள்ள நிலையில், இன்னும் ஐந்து மாதங்களே உள்ளதால் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக களம் இறங்கியுள்ளன.
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் அனைத்தும் ஒற்றுமையாக இருப்பதால் வலுவான கூட்டணியாக உள்ளது. அதே நேரம் அதிமுகவுடன் பாஜ இணைந்து ஒரு கூட்டணியை அமைத்துள்ளது. ஆனால் பாஜவுடன் கூட்டணி அமைத்ததை அந்த கட்சி மூத்த தலைவர்கள் பலர் விரும்பவில்லை. இதனால் அதிமுக அழைப்பு விடுத்தும் வேறு எந்த கட்சிகளும் இன்னும் அதிமுக கூட்டணிக்கு வரவில்லை. இந்த சூழ்நிலையில் திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தி, அங்குள்ள கட்சிகளுடன் கருத்து மோதல்களை உருவாக்கும் செயல்களை சிலர் ஏற்படுத்துவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்தது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணி மிகவும் பலம் வாய்ந்ததாக இருக்கிறது என நிபுணர்கள் கூறி வருகின்றனர்.
இருப்பினும் காங்கிரஸ் கட்சி, விஜய்யின் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி வைக்க உள்ளதாக தகவல் பரவியது. இதனை மறுக்கும் வகையில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேசி உள்ளார். 2026 தேர்தலிலும் திமுகவுடன் தான் காங்கிரஸ் கட்சிக்கு கூட்டணி என்பதை உறுதிபடுத்தி அறிவித்துள்ளார். குறிப்பாக, தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டில் திமுகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடந்த 5 பேர் கொண்ட குழுவை அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைமை அமைத்துள்ளது. காங்கிரஸ் தலைமையின் இந்த அறிவிப்பு, ஒரு சிலரால் பரப்பப்பட்ட வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக காங்கிரஸ் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘தமிழ்நாட்டில் கூட்டணி கட்சிகளுடன் கலந்துரையாடலை தொடங்குவதற்காக 5 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழுவை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, தமிழக மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில் அமைத்துள்ளார். இந்த குழுவில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மேலிட பொறுப்பாளர்கள் சூரஜ் எம்.என்.ஹெக்டே, நிவேதிக் ஆல்வா, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்’’ என்று கூறியுள்ளார். பேச்சுவார்த்தை நடந்த 5 பேர் கொண்ட குழு அமைத்ததின் மூலம் திமுகவுடனான கூட்டணியை காங்கிரஸ் உறுதி செய்துள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சி தன்னுடன் கூட்டணிக்கு வரும் என்று நம்பியிருந்த நடிகர் விஜய் அதிர்ச்சி அடைந்துள்ளார்
* அரசல்புரசல் செய்திகளுக்கு முடிவு-ப.சிதம்பரம்
கூட்டணி பற்றி திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு காங்கிரஸ் தலைமை ‘ஐந்து உறுப்பினர் குழு’ வை நியமித்திருப்பது வரவேற்க கூடியது என முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ப.சிதம்பரம் நேற்று தனது டிவிட்டர் பதிவில், ‘‘தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலை கருதி திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு காங்கிரஸ் தலைமை ‘ஐந்து உறுப்பினர் குழு’ வை நியமித்திருப்பதை வரவேற்கிறேன் ‘இந்தியா கூட்டணி’ யின் ஒற்றுமையை இந்த அறிவிப்பு வலியுறுத்துகிறது, அரசல்புரசலாக அவ்வப்போது வெளியிடப்படும் செய்திகளுக்கு இந்த அறிவிப்பு முடிவு கட்டும் என்று நம்புகிறேன்’’ என கூறியுள்ளார்.


