Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கூட்டணி அமைச்சரவைக்கு எடப்பாடி சம்மதிக்காததால் கட்சியை உடைக்கும் பாஜ அமித்ஷாவுடன் செங்கோட்டையன் சந்திப்பில் முக்கிய முடிவு: டிடிவி தினகரனுக்கும் அழைப்பு

சென்னை: கூட்டணி அமைச்சரவைக்கு எடப்பாடி பழனிசாமி சம்மதிக்காததால், கட்சி உடைக்கும் வேலையை பாஜ தொடங்கியுள்ள நிலையில், அமித்ஷா, நிர்மலாவை செங்கோட்டையன் டெல்லியில் நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினார். அதைத் தொடர்ந்து டிடிவி தினகரனுக்கும் பாஜ தலைமை டெல்லிக்கு வரும்படி அழைப்பு விடுத்துள்ளதால், தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பாஜ முயன்றது. ஆனால் எடப்பாடி பழனிசாமிக்கும், அண்ணாமலைக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் கூட்டணி உடைந்தது.

இருவரும் தனித்தனி அணி அமைத்துப் போட்டியிட்டனர். இருவரும் தோல்வியை தழுவினர். அதைத் தொடர்ந்து அண்ணாமலையின் பதவி பறிக்கப்பட்டது. புதிய மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார். இந்தநிலையில் அதிமுகவுடன் கூட்டணியை ஏற்படுத்த அதிமுகவை உடைக்கும் முயற்சியை பாஜ தொடங்கியது. இதற்காக செங்கோட்டையனை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்துப் பேசினார். அதன்பின்னர் எடப்பாடியை டெல்லிக்கு அழைத்துப் பேசிய அமித்ஷா, சில தகவல்களை கூறி மிரட்டும் தொனியில் பேசியதாக கூறப்படுகிறது.

இதனால் கூட்டணி உருவானது. கூட்டணியை அறிவிக்கும்போது, தமிழகத்தில் அதிமுக, பாஜ கூட்டணி அமைச்சரவை அமைக்கப்படும் என்று அமித்ஷா அறிவித்தார். ஆனால் எடப்பாடி பழனிசாமியோ, கூட்டணி அமைச்சரவை எல்லாம் கிடையாது. இந்தக் கூட்டணி அமைச்சரவை அமைக்கும் என்றுதான் அமித்ஷா தெரிவித்தார் என்றார். ஆனால் அதன்பின்னர் தொடர்ந்து பல பேட்டிகளில் கூட்டணி அமைச்சரவைதான் என்று அமித்ஷா கூறினார்.

ஆனால் எடப்பாடியும் தனித்து ஆட்சி அமைப்போம் என்றார். நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், தன்னைக் கண்டு பயந்து கூட்டணி அமைக்கும்போது, தமிழகத்தில் மட்டும் ஆட்சியில் இல்லாமல் எப்படி எடப்பாடி பழனிசாமி மட்டும் தன் பேச்சை கேட்பதில்லை என்று அமித்ஷா கடும் கோபமடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் மீண்டும் அதிமுகவை உடைக்கும் பணியை பாஜ தொடங்கியுள்ளது. அதன் ஒரு கட்டமாகத்தான் ஓபிஎஸ்சும் டிடிவி.தினகரனும் ஒருவர் பின் ஒருவராக கூட்டணியை விட்டு விலகினர்.

இதன் பின் அதிமுக தலைவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்று கூறி செங்கோட்டையனை வாய்ஸ் கொடுக்க வைத்தது பாஜ. அதன்படி அவரும் வாய்ஸ் கொடுத்தார். ஆனால் எதிர்பார்க்காத விதமாக செங்கோட்டையனின் பதவியை 24 மணி நேரத்தில் எடப்பாடி பழனிசாமி பறித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த செங்கோட்டையன், தான் அடுத்த என்ன செய்வது என்று தெரியாமல்,நேற்று முன்தினம் காலையில் டெல்லி புறப்பட்டுச் சென்றார். டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை இரவு செங்கோட்டையன் சந்தித்துப் பேசினார்.

அப்போது அதிமுகவை உடைப்பது குறித்தும், எடப்பாடியை கட்டுப்பாட்டில் வைப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. அதற்கான ஒரு செயல்திட்டமும் வகுக்கப்பட்டுள்ளது. செங்கோட்டையன் நேற்று பிற்பகலில் டெல்லியில் இருந்து கோவை திரும்பினார். அதைத் தொடர்ந்து பாஜ கூட்டணியில் இருந்து வெளியேறிய டிடிவி தினகரனை டெல்லி வரும்படி மேலிடம் அழைப்பு விடுத்துள்ளது. அதன்பின்னர் அதிமுகவில் மேலும் பல தலைவர்கள் போர்க்கொடி தூக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரத்தில், எடப்பாடி பழனிசாமி நேற்று முதல் வருகிற சனிக்கிழமை வரை கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் 2வது கட்ட சுற்றுப் பயணத்தை தொடங்குகிறார். மேலும், செங்கோட்டையனின் ஆதரவாளர்களை கண்டுபிடித்து அவர்களை மீண்டும் தங்கள் பக்கம் இழுக்கும் பணிகளையும் தொடங்கியுள்ளார். இது அதிமுகவில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

* செங்கோட்டையன் நேற்று பிற்பகலில் டெல்லியில் இருந்து கோவை திரும்பினார். அதை தொடர்ந்து பாஜ கூட்டணியில் இருந்து வெளியேறிய டிடிவி.தினகரனை டெல்லி வரும்படி மேலிடம் அழைப்பு விடுத்துள்ளது.

* எடப்பாடி பழனிசாமி நேற்று முதல் வருகிற சனிக்கிழமை வரை கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் 2வது கட்ட சுற்றுப் பயணத்தை தொடங்குகிறார். செங்கோட்டையனின் ஆதரவாளர்களை தங்கள் பக்கம் இழுக்கும் பணிகளையும் தொடங்கியுள்ளார்.