Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பாஜவுடன் கூட்டணி வைத்ததால் முழு சங்கியாக மாறிய எடப்பாடி : துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கடும் தாக்கு

திருவண்ணாமமலை: பாஜவுடன் கூட்டணி வைத்ததால் எடப்பாடி பழனிசாமி முழு சங்கியாக மாறிவிட்டார் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். வாணியந்தாங்கல் பகுதியில், திருவண்ணாமலை வடக்கு மண்டல திமுக தேர்தல் பணிக்கான வாக்குச்சாவடி பாக முகவர்கள் பயிற்சி பாசறை கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: நாம் களத்திலும், தேர்தல் ரேசிலும் முதலிடத்தில் போய் கொண்டிருக்கிறோம். அதையெல்லாம் பார்த்து, எடப்பாடி பழனிசாமிக்கு பதற்றம் வந்துவிட்டது. ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பை கிண்டல் செய்கிறார்.

தேர்தல் வந்ததும் திமுகவினர் வீட்டு கதவுகளை தட்டுகின்றனர் என கிண்டல் செய்திருக்கிறார். தமிழ்நாட்டு மக்களின் வீட்டு கதவுகளை உரிமையோடு தட்டுகிறோம். எடப்பாடி பழனிசாமி மாதிரி, அமித்ஷா வீட்டு கதவையோ, கமலாலய கதவையோ திருட்டுத்தனமாக தட்டவில்லை. மக்களுக்கு கடந்த நான்கு ஆண்டுகளில் பல பணிகளை செய்துள்ளோம். அந்த தைரியத்தோடு தட்டுகிறோம். திமுக மக்கள் இயக்கம். மக்களிடம் செல், மக்களிடம் பழகு என்றுதான் அண்ணா கற்றுக்கொடுத்தார்.

திமுகவுக்கு மக்கள் தரும் ஆதரவை பார்த்து, எடப்பாடி பழனிசாமி உளறுகிறார். திமுகவுக்கு ஆதரவாக மக்கள் வருவதை பார்த்து அவருக்கு எரிச்சல் வருகிறது. அண்ணா பெயரில் கட்சியை வைத்துக்கொண்டு, சுயநலத்துக்காக மொத்தமாக அமித்ஷாவிடம் அடகு வைத்துள்ள எடப்பாடி பழனிசாமியை பார்த்து தமிழ்நாட்டு மக்கள் சிரிக்கின்றனர். கோயில் நிதியில் பிள்ளைகள் படிக்க கல்லூரி தொடங்கினால், எடப்பாடிக்கு ஏன் கோபம் வருகிறது.

இந்து சமய அறநிலையத்துறையே இருக்கக்கூடாது என்று சொல்லும் பாஜவுடன் கூட்டணி வைத்ததால், எடப்பாடி பழனிசாமி முழு சங்கியாக மாறியிருக்கிறார்.அவரது பேச்சுக்கு மக்களிடம் எதிர்ப்பு வந்ததால், அப்படி பேசவில்லை என்று மழுப்பி வருகிறார். எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தை ஆரம்பிக்கும் போது, வெள்ளை வேட்டி சட்டையுடன் ஆரம்பித்தார். இன்றைக்கு முழு காவி சாயத்துடன் இருக்கிறார். இனிமேல் அதை மூடி மறைத்து எந்த பயனும் இல்லை.

தமிழ்நாட்டுக்குள் பாஜவுக்கு பாதை போட்டுக் கொடுக்கலாம் என எடப்பாடி பார்க்கிறார். அதற்கு, தமிழ்நாட்டு மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். உங்கள் எண்ணத்தை ஈடேற்ற திமுகவினர் விடமாட்டார்கள். தமிழ்நாட்டு மக்கள் ஓரணியில் நின்று அடிமைகளையும் பாசிஸ்டுகளையும் விரட்டப்போவது உறுதி. அந்த பணியில் பூத் கமிட்டி நிர்வாகிகள் கவனத்துடன் களம் இறங்க வேண்டும்.திமுக 7வது முறையாக ஆட்சி அமைக்கவும், இரண்டாவது முறையாக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராகவும் நாம் இந்த பணியை செய்து காட்ட வேண்டும். வெல்வோம் இருநூறு, படைப்போம் வரலாறு. இவ்வாறு அவர் பேசினார்.

* ‘ஒரு தொகுதியில் கூட டெபாசிட் வாங்காது’

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், ‘பாஜவுடன் எந்த காலத்திலும் கூட்டணி இல்லை என்று சொல்லிவிட்டு, அடுத்த மாதமே ஓடி ஒளிந்துப்போய், நான்கு கார்கள் மாறி டெல்லிக்கு சென்று பாஜவுடன் கள்ளக்கூட்டணி வைத்தவர்தான் எடப்பாடி பழனிசாமி. இன்றைக்கு அது வெளியே வந்துவிட்டது. அமித்ஷா கூட்டணி ஆட்சி என்கிறார். எடப்பாடி கூட்டணி ஆட்சி இல்லை என்கிறார். அவர்களுக்குள் ஒற்றுமை இல்லாத நிலை. இரண்டு பேரும் போட்டிப் போட்டுக்கொண்டு இருந்தால் அந்த கூட்டணி ஒரு தொகுதியில்கூட டெபாசிட் வாங்காது. அதையெல்லாம் தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்’ என்றார்.