Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பான அனைத்து புகார் மனுக்களும் விரைந்து முடிக்கப்படும்: உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் உறுதி

சென்னை: அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பான மனுக்கள் மீது விரைவாக விசாரித்து முடிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளது. அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக திண்டுக்கல்லை சேர்ந்த சூரியமூர்த்தி, வழக்கறிஞர் ராம்குமார் , பெங்களூர் புகழேந்தி உள்ளிட்டோர் அளித்த புகார்கள் மீதான ஆரம்பகட்ட விசாரணையை நடத்தி முடிக்க, தேர்தல் ஆணையத்துக்கு காலவரம்பு நிர்ணயிக்கக் கோரி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு தயாராக வேண்டியுள்ள சூழலில், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த வாய்ப்புள்ளதால், ஆரம்ப கட்ட விசாரணையை தேர்தல் ஆணையம் தாமதப்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், கே.சுரேந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு, அதிமுக உள்கட்சி விவகாரம் தொடர்பான புகார்கள் மீது எப்போது முடிவெடுக்கப்படும் என்று காலவரம்பை குறிப்பிட்டு எழுத்துப்பூர்வமான விளக்கத்தை தாக்கல் செய்யுமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த பதில் மனுவில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி ஏற்கனவே 10 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு எழுத்துப்பூர்வமான மனுக்கள் பெறப்பட்டுள்ளது.

இயற்கை நீதியின் அடிப்படையில் மனுதாரர்களுக்கு போதுமான கால அவகாசம் வழங்கப்பட வேண்டும். ஆரம்பகட்ட விசாரணை முடிக்கப்பட்ட பின்பு, இந்த பிரச்சனை குறித்து உரிய முடிவெடுக்கப்படும். பீகார் தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு வேலை பளு அதிகமாக உள்ளது. அரசியல் சாசன அமைப்பான தேர்தல் ஆணையத்துக்கு, விசாரணை தொடர்பாக கால வரம்பு நிர்ணயிக்க தேவையில்லை. உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி விரைவாக விசாரித்து முடிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கின் விசாரணை இன்றும் தொடர்ந்து நடைபெறவுள்ளது.